எங்கே என்பதை பின்னர் தெரிவிப்பேன் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி


எங்கே என்பதை பின்னர் தெரிவிப்பேன் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 4:00 AM IST (Updated: 11 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆலோசனை

மக்கள் நீதி மய்யத்தின் வக்கீல் அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கமல்ஹாசன் தலைமை தாங்கினார். வக்கீல் அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனையும் வழங்கினார்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரொம்ப பொருத்தமான சின்னத்தை எங்களுக்கு வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தீமைகளை தேடி கண்டுபிடிக்கும் ஒரு முனைப்போடு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்துக்கு, இது ரொம்ப பொருத்தமான சின்னமாக எங்களுக்கும் தோன்றுகிறது. எங்களுக்கு பாராட்டு தெரிவிப்பவர்களுக்கும் அதே சிந்தனை இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மீது தாக்கு

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘டார்ச் லைட்’டை வைத்தாவது கட்சியை தேடி கண்டுபிடிக்கட்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- எந்த கட்சியை என்று சொல்லவில்லை என்றால், அவர் சார்ந்த கட்சியைத்தான் (பா.ஜ.க.) என்று கருதவேண்டியிருக்கும்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடிகர்கள் காணாமல் போவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறாரே..

பதில்:- அவர் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பெயர் மாற்றிவைத்தார்களே, அந்த நடிகரில் இருந்து சொல்கிறாரா? எனக்கு புரியவில்லை. எல்லா நடிகர்களையும் ஒரே மாதிரி சொல்ல முடியாது.

மக்களுடன் கூட்டணி

கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைத்து போட்டியிடுமா?

பதில்:- எங்கள் கூட்டணியை பேசி முடித்துவிட்டோம். நல்லவர்கள் வந்தால் சேர்த்துக்கொள்வோம்.

தேர்தல் அறிக்கை

கேள்வி:- தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெறுமா?

பதில்:- பூரண மதுவிலக்கு சாத்தியமா? என்பதற்கு உலக சரித்திரமே சான்றாக இருக்கிறது. அப்படி ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் இப்போது கோட்டையை ஆக்கிரமித்து கொண்டிருந்தவர்கள் முழுவதுமாக அந்த வியாபாரத்துக்கு போய்விடுவார்கள். அது பெரிய இடைஞ்சலை விளைவிக்கும். படிப்படியாக என்பது தான் நடக்கக்கூடிய விஷயம். அதற்கு மக்களும் ஒத்துழைக்கவேண்டும். அது கெட்ட பழக்கம் என்பதை மக்களும் முடிவு செய்யவேண்டும்.

ரஜினிகாந்திடம் ஆதரவு?

கேள்வி:- ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறதா?

பதில்:- நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

கேள்வி:- 21 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?

பதில்:- கண்டிப்பாக போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்:- கண்டிப்பாக போட்டியிடுவேன். எங்கே என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

Next Story