விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது
x
தினத்தந்தி 11 March 2019 2:45 AM IST (Updated: 11 March 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லை. அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லை. அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மோதிரம் சின்னம்

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் அந்தக் கட்சிக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறையும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழ்நாடு இளைஞர் கட்சியும் மோதிரம் சின்னத்தை விருப்பம் தெரிவித்து கேட்டிருந்தது.

சின்னம் குறித்து இன்று முடிவு

கடைசியில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கே மோதிரம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு, நட்சத்திரம், மணி, மெழுகுவர்த்தி ஆகிய சின்னங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டிருக்கிறது. எனவே, அந்தச் சின்னங்களில் இருந்து ஒன்றை கேட்குமா? அல்லது தி.மு.க.வின் விருப்பப்படி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமா? என்பது குறித்து இன்னும் அக்கட்சி முடிவு எடுக்கவில்லை.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் கேட்டபோது, “நாங்கள் கடந்த 2 தேர்தல்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தோம். இந்த முறையும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தோம். ஆனால், அதிக தொகுதிகளில் போட்டியிடுவதை காரணம் காட்டி, தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சின்னம் குறித்து எங்கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (திங்கட்கிழமை) முடிவு எடுத்து அறிவிப்பார். எந்தச் சின்னம் வேண்டும் என்பது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்” என்றார்.

Next Story