சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை கடத்தி வாலிபர் எரித்து கொலை


சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை கடத்தி வாலிபர் எரித்து கொலை
x
தினத்தந்தி 10 March 2019 9:15 PM GMT (Updated: 2019-03-11T02:29:35+05:30)

சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை அரக்கோணம் பகுதிக்கு கடத்தி வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணம், 

சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை அரக்கோணம் பகுதிக்கு கடத்தி வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார்.

கன்டெய்னர் லாரி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் இதன் அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் முன்பகுதி தீயில் எரிந்து கொண்டு இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது. போலீசார் சென்று பார்த்தபோது தீயில் எரிந்த லாரியின் முன்பகுதியில் கிளனர் இருக்கை அருகே வாலிபர் ஒருவர் தீயில் கருகி கரிக்கட்டையாக கிடந்தார்.

நாமக்கல் லாரி

தீயில் எரிந்து சாம்பலான கன்டெய்னர் லாரி நாமக்கல் பகுதியை சேர்ந்தது ஆகும். இந்த லாரி தினமும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கார் நிறுவனத்தில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு துறைமுகத்தில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம். லாரியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த காளிராஜ் (வயது 26) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

சென்னையில் இருந்த லாரி அரக்கோணம் பகுதிக்கு எப்படி வந்தது?, இறந்து கிடக்கும் நபர் யார்? சென்னையில் இருந்து லாரியை கடத்தி வந்து வாலிபரை எரித்து கொன்றார்களா? டிரைவர் காளிராஜ் எங்கே? என தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story