கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது


கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது
x
தினத்தந்தி 10 March 2019 10:00 PM GMT (Updated: 10 March 2019 9:11 PM GMT)

திண்டுக்கல் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். வங்கியில் அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். வங்கியில் அலாரம் ஒலித்ததால் ரூ.1 கோடி நகை-பணம் தப்பியது.

கொள்ளை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் மங்களப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த வங்கியின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் வங்கி கதவில் பொருத்தப்பட்டிருந்த 2 பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்தனர். உட்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமரா மற்றும் அலாரம் வயர்களை துண்டிக்க முயன்றனர். அப்போது வங்கியில் உள்ள அலாரம் திடீரென ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடினர். கூட்டுறவு வங்கி ஊருக்கு வெளிப்பகுதியில் இருப்பதால் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை.

நகை-பணம் தப்பியது

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், கூட்டுறவு வங்கி பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் வங்கிக்கு சென்று லாக்கரில் உள்ள நகை, பணத்தை சரிபார்த்தனர்.

அப்போது லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளும், பணமும் பாதுகாப்பாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story