போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எத்தனை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எத்தனை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 12 March 2019 1:48 AM IST (Updated: 12 March 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

சிவகங்கையை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக போலீஸ் நிலையங்களில் ஆண்டுதோறும் பதிவாகும் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆவதால், அந்த வழக்குகளில் சிக்கி உள்ளவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் விசாரணை முறையாக நடைபெறுவது இல்லை. வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்படுவது இல்லை. இதனால் உண்மையாகவே தவறு செய்யாதவர்கள், வெளிநாடுகளில் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற வழக்குகள் இடையூறாக உள்ளன. இதனால் பல்வேறு வழக்குகளின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டை நாடும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு வழக்குகளை விசாரித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் 3 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story