மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 9:15 PM GMT (Updated: 2019-03-12T02:05:21+05:30)

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறினார்.

கோவை,

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் 24-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 25-ந் தேதி சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக் கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா பேரவை செயலாளர்

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் வேறு நபர்களுக்கோ, அரசியல் கட்சியினருக்கோ தொடர்பு இல்லை. இது சம்பந்தமாக தவறான தகவல் பரப்பு பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ், பொள்ளாச்சி 34-வது வார்டு ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்துள்ளார். அவருக்கு ஆபாச வீடியோ தொடர்பான வழக் கில் தொடர்பு இல்லை. புகார் அளித்த பெண்ணின் சகோ தரரை மிரட்டிய வழக்கு மட்டுமே உள்ளது.

பெண் உதவி

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 4 வீடியோக்கள் மட்டுமே உள்ளன.

திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் தான் திருநாவுக்கரசு பிற பெண்களுடன் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளார்.

மேலும் அவர் தலைமறைவாக இருந்த போது அந்த பெண் தான் உதவி செய்துள்ளார். இந்த வழக்கில் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியாக பெண் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவார். பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். இதில் அந்த பெண்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story