உரிமம் வாங்கியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
உரிமம் வாங்கியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை செய்யக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது தமிழகத்தில் தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்கப்படுகின்றன. வெளிநாட்டு ரக மதுபானங்களும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்றன. போதைக்காக மதுபானத்தில் அதிக ரசாயனம் கலக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு தரம் குறைந்த மதுபானங்களை விற்று, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மதுவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த மது பழக்கத்தை குறைக்க மதுபான சந்தையை கட்டுப்படுத்துவது, சுலபமாக மதுபானம் கிடைப்பதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது, மதுவால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மது போதையில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மையங்களை திறப்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் அரசிடம் முன்வைக்கப்பட்டு உள்ளன.
உரிமம் வாங்கியவர்களுக்கு...
இந்த யோசனைகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமுதாய நலனைப்பற்றி கவலைப்படாமல் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே வெளிநாடுகளில் உள்ளதை போல் உரிமம் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க வேண்டும். இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டால் அனைவருக்கும் மது கிடைப்பது தடுக்கப்படும். எனவே தமிழகத்தில் மதுபானங்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உரிமம் வழங்குவதை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நோட்டீஸ்
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகளின் உள்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story