மேற்கூரை கண்ணாடி போன்ற அமைப்புடன் ஊட்டி மலை ரெயிலுக்கு 2 பெட்டிகள் புதுவிதமாக தயாரிப்பு
திருச்சி பொன்மலை பணிமனையில் ஊட்டி மலை ரெயிலுக்கு 2 பெட்டிகள் எழில் தோற்றத்தில் புதுவிதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மேற்கூரை கண்ணாடி போன்று அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் என்ஜின்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஊட்டி மலை ரெயிலுக்கு ஏற்கனவே உள்ள பெட்டிகளை போல இல்லாமல் புதுவிதத்தில் 2 பெட்டிகள் பொன்மலை பணிமனையில் தயாரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆணை பெறப்பட்டது. அதன்படி முதன்முறையாக புதுவிதத்தில் 2 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த 2 பெட்டிகளில் ஒன்று குளிர்சாதன வசதியுடையதாகும். மற்றொரு பெட்டி சாதாரண பெட்டியாகும். 2 பெட்டிகளிலும் மேற்கூரை ‘பாலிகார்பனேட்’ பொருட்கள்மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கூரை கண்ணாடி போன்று உள்ளது. பெட்டிகளில் ஜன்னல் இருக்கைகளும் வெளிப்படையாக தெரியும் வகையில் உள்ளது.
சாய்வு இருக்கைகள்
மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயிலில் பயணிகள் பயணத்தின்போது வெளிப்புற தோற்றத்தையும், வானத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்க முடியும். ஒவ்வொரு பெட்டியும் தலா 13 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதில் தலா 46 சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த இருக்கைகளை போல இல்லாமல் சொகுசு இருக்கையாக உள்ளன.
பெட்டிகளின் வெளிப்புறத்தில் பசுமை நிறத்தில் இயற்கை எழில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. காட்டில் மிருகங்கள் உலா வருவது போலவும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது. பெட்டிகளின் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றம் பளபளப்பாகவும், அழகாகவும் ரசிக்கும்படி உள்ளது. 2 பெட்டிகளிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரெயிலுக்கான 2 புதிய பெட்டிகளை சமீபத்தில் ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தற்போது இந்த 2 பெட்டிகளும் திருச்சி பொன்மலை பணிமனையில் உள்ளது. இதனை இங்கிருந்து ஓரிரு நாட்களில் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதன்பிறகு அங்கு இயக்கப்படும். இந்த பெட்டிகளில் பயணத்தின்போது பயணிகள் புதுவித மகிழ்ச்சியை உணரமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
Related Tags :
Next Story