அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி: 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்த உறவு
7 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி மலர்ந்துள்ளது.
சென்னை,
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை என்று சொல்வார்கள். எலியும், பூனையுமாக அரசியல் களத்தில் சண்டையிட்டு, எதிரும், புதிருமாக இருப்பவர்கள், தேர்தல் என்று வரும்போது, மறப்போம், மன்னிப்போம் என்ற வாசகத்துடன் கரங்களை சேர்த்துக்கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளை மக்களும் பெரியதாக எடுத்துக்கொள்ளவதில்லை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் வரப்பிரசாதம் தான். முன்பு நடந்ததையும், பின்பு நடந்ததையும் நகைச்சுவையுடன், வடிவமைத்து இணையத்தில் உலாவ விட்டு விடுகிறார்கள்.
அ.தி.மு.க. மீது சரமாறி குற்றச்சாட்டுகளை வைத்த விஜயகாந்த், 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார். இந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடுமையாக சாடிய ஜெயலலிதா
ஜெயலலிதா முதல்-அமைச்சர், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற நிலையில் சுமூகமாக சென்ற கூட்டணி 2012-ம் ஆண்டு கடும் மோதலுடன் முடிவுக்கு வந்தது. 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை நிகழ்வுகளின்போது, மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தே.மு.தி.க. வினர் அரசை குற்றஞ்சாட்டி பேசினர். இதற்கு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தார். அந்த நேரத்தில், சட்டசபையில் இருந்த விஜயகாந்த் நாக்கை துருத்திக்கொண்டு, எழுந்து நின்று ஆவேசமாக பேசினார். இதனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூச்சல், குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஜெயலலிதா எழுந்து பேசினார். அப்போது அவர், ‘தகுதி அற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல், மிகவும் வெறுக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க நேர்ந்ததே என்று நினைக்கும்போது, நான் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். எங்களால் அவர்களுக்கு வந்த ஏற்றம் இத்துடன் முடிந்தது. இனி எல்லா நாட்களும் தே.மு.தி.க.வுக்கு இறக்கம் தான்’ என்று கடுமையாக விமர்சித்தார்.
மீண்டும் மலர்ந்தது
இந்த நிகழ்வுக்கு பிறகு, அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. மேடைக்கு, மேடை இரு கட்சிகளும் மாறி, மாறி அந்தந்த கட்சி தலைவர்களை விமர்சனம் செய்தன. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் தே.மு.தி.க.-அ.தி.மு.க. இடையே நீர்பூத்த நெருப்பாக பகைமை உருவாகியது. அதன்பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தல், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் என எந்த தேர்தலிலும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி அமையவில்லை. அதே சமயத்தில் தி.மு.க. பக்கமும் தே.மு.தி.க. செல்லாதவாறு, அரசியல் காய்களை அ.தி.மு.க. அந்த நேரத்தில் நகர்த்தியது. 2012-ம் ஆண்டு கூட்டணி முறிந்த அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்துள்ளது.
Related Tags :
Next Story