3 தொகுதிகளில் தேர்தலை தள்ளிவைத்ததில் உள்நோக்கம்: நியாயம் கிடைக்காவிட்டால் கோர்ட்டை நாடுவோம் மு.க.ஸ்டாலின் பேட்டி


3 தொகுதிகளில் தேர்தலை தள்ளிவைத்ததில் உள்நோக்கம்: நியாயம் கிடைக்காவிட்டால் கோர்ட்டை நாடுவோம் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2019 5:00 AM IST (Updated: 12 March 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

“ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது”, என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் துரைமுருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சுதர்சனம், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

40-க்கு 40

இந்த கூட்டத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே தி.மு.க. சார்பில் 12 ஆயிரத்து 500 கிராம சபை கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தை வலுவாக முன்னெடுத்து இருக்கிறோம். 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி எப்படி 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதோ, அதே வெற்றியை நிச்சயம் இம்முறை பெறுவோம்.

தமிழகத்தில் நியாயமாக 21 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் நீதிமன்ற வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறது.

உள்நோக்கம் இருக்கிறது

வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபல்ல. இந்த 3 தொகுதிகளிலும் தேர்தலுக்கு தடை உத்தரவு போடவில்லை. எனவே இந்த 3 தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கவேண்டிய அவசியம் என்ன? இதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனை தீர்மானமாகவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்.

ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மேற்கண்ட 18 தொகுதிகளில் கடந்த 15 மாதங்களாக தேர்தல் நடத்தாமல் எடப்பாடி பழனிசாமி அரசு சதி செய்து வந்தது. திடீரென்று திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்கள். ஆக எந்த விதிகள் அடிப்படையில் இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக்கூடாது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எங்கள் எம்.பி.க்கள் சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் மனு வழங்க உள்ளார்கள். அதன்பின்னரும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐகோர்ட்டையும், தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டையும் நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கை

இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. போட்டியிடும் இடங்கள், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் என்னென்ன... என்பது எப்போது அறிவிக்கப்படும்?

பதில்:- காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தவிர்த்து பாக்கி எல்லா கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இருந்தாலும் மரபுப்படி எல்லா கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முழுமை அடைந்ததற்கு பிறகு முறையாக அறிவிக்கப்படும். இன்று இரவோ (நேற்று) அல்லது நாளையோ (இன்று) அது முழுமை அடையும்.

கேள்வி:- தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்?

பதில்:- இரண்டு, மூன்று நாளில் வெளியாகும்.

இடைத்தேர்தல்களில் தி.மு.க. மட்டுமே...

கேள்வி:- பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இறுதி கட்டமாக (7-ம் கட்டமாக) தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு அங்கு தேர்தல் நடைபெற இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது.

கேள்வி:- தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

பதில்:- இடைத்தேர்தலில் தி.மு.க. தான் போட்டியிடும். இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டோம்.

கொள்கை, லட்சியமிக்க கூட்டணி

கேள்வி:- நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்று அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாரே?

பதில்:- நீங்கள் ஏதாவது கலகம் செய்ய வந்திருக்கிறீர்களா...

கேள்வி:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி குறித்து...

பதில்:- அந்த கூட்டணி கொள்கையற்ற கூட்டணி. தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி தான் கொள்கைமிக்க, லட்சியமிக்க கூட்டணி.

மேற்கண்டவாறு மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.

Next Story