தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்


தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2019 11:45 PM GMT (Updated: 2019-03-12T03:51:24+05:30)

தலைமை செயலகத்தில் நேற்று தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது.

மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. 10-ந் தேதியில் இருந்து அமலாகியிருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவு கண்காணிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பங்கேற்றவர்கள் யார்?

அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், பாபு முருகவேல்; தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன்; பா.ஜ.க. சார்பில் நரேந்திரன், சவுந்திரராஜன்; காங்கிரஸ் சார்பில் விஜயன், சிவலிங்கம்; தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி, அபுபக்கர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுகநாயினார், உதயகுமார்; இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஏழுமலை ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குடிநீர் திட்ட அனுமதி

அதன் பின்னர் அந்தந்த கட்சி சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பொள்ளாச்சி ஜெயராமன்:- தேர்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறோம். வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யாத பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்ற அதற்கான அனுமதியை உடனுக்குடன் தர வேண்டும் என்று கோரினோம். அதற்கு ஆவன செய்யப்படும் என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.

ஏழுமலை:- இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தக் கோரினோம். கோர்ட்டு உத்தரவின் பேரில் அதை நடத்துவதற்கு முயற்சி செய்வதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

கள்ளழகர் நிகழ்ச்சி

ஆர்.எஸ்.பாரதி:- மதுரை கள்ளழகர் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். அவர்கள் அனைவருமே தேர்தலில் வாக்களிக்க வகை செய்ய வேண்டும் என்று கோரினோம். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கலெக்டர் ஆலோசனை கேட்க வற்புறுத்தி இருக்கிறோம்.

வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பல இடங்களில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினோம். அந்த வகையில் ஒன்றரை லட்சம் பெயர்கள் இருப்பதாக கூறியிருக்கிறோம்.

வன்முறைக்கு வாய்ப்பு

இந்த தேர்தலில் வன்முறை, பணப்பட்டுவாடா நடக்க அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறியிருக்கிறார். குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் பலர் வெளியே வந்து வன்முறையில் ஈடுபடக்கூடும். எனவே இதில் போலீஸ் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டோம்.

தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால், கட்சி கொடிகளை கம்பங்களில் இருந்து அகற்றலாம். ஆனால் பல இடங்களில் ஆளும் கட்சியினர் கொடிக் கம்பங்களையே வெட்டிவிடுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.

வழக்கை திரும்பப்பெற்றால் கோர்ட்டின் உத்தரவுப்படி 3 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த உரிய முறையில் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி அவர்களின் அனுமதியை பெற முடியும் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தாமதங்கள்

நரேந்திரன்:- தேர்தல் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று உறுதிப்பட கூறி இருக்கிறோம். இதில் பல்வேறு அனுமதியை அரசியல் கட்சிகள் பெறுவதற்கு ஏற்படும் தாமதங்களை களைவது குறித்து பேசினோம். வாக்குகள் சரியான வகையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கை தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story