நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், அ.தி.மு.க. தலைமை நடத்திய நேர்காணல் முடிந்தது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு செய்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
2-வது நாளாக நேற்றும் வேட்பாளர் நேர்காணல் நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் இ.மதுசூதனன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் நேர்காணலை நடத்தினர்.
அறிவுரைகள்
நேற்று நடந்த நேர்காணலில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது.
இந்த நேர்காணலின்போது, ‘கட்சி ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும். யாரை வேட்பாளராக முன்னிறுத்தினாலும் வெற்றிக்காக பாடுபட வேண்டும். எந்த வித சச்சரவுக்கும் இடம் தராமல் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமை இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’ என்பன போன்ற அறிவுரைகளை கட்சி தலைமை வழங்கி இருக்கிறது.
நேற்றுடன் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் விருப்ப மனு
நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. விருப்ப மனுவின் விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும்.
விருப்ப மனுக்களை அன்றைய தினமே தாக்கல் செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story