‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா சென்னையில் 23-ந்தேதி நடக்கிறது


‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா சென்னையில் 23-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 13 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில் 7-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா சென்னையில் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது.

சென்னை, 

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு பெண் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு 7-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா வருகிற 23-ந்தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவை ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பு, சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீதங்கம் ஜூவல்லரி ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா

விழாவுக்கு ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா (இசையமைப்பாளர், தயாரிப்பாளர்) தலைமை தாங்குகிறார். இதில் தொழில் அதிபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, சாதனை பெண்களுக்கு விருது வழங்க இருக்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான ரெயின்டிராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது புகழ்பெற்ற மூத்த பரத நாட்டிய கலைஞர் பத்மபூஷன் சாந்தா தனஞ்செயனுக்கு வழங்கப்பட இருக்கிறது. பெண் சாதனையாளர் விருதினை கேரளாவை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் ஆழ்கடல் மீனவர் ரேகா கார்த்திகேயன் பெறுகிறார்.

சிறந்த ஆளுமைக்கான விருதை ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவும், சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை மும்பையை சேர்ந்த ரேவதி ராயும், சிறந்த இரும்பு பெண்மணி விருதை ரூபி பியூட்டியும் பெற இருக்கின்றனர்.

மகிழ்ச்சி, பெருமை...

இதுபோல், சாரங்கி இசை கலைஞர் மனோன்மணி, சிலம்பம் சாம்பியன் ஐஸ்வர்யா மணிவண்ணன், 84 வயதான தடகள வீராங்கனை டெய்சி விக்டர், சமீபத்தில் சமூகத்துக்கு வெற்றிகரமான செயல்திட்டங்களை உருவாக்கிய டாக்டர் திவ்யா சத்யராஜ், பெண்களுக்கான குறைந்த விலை இயற்கை நாப்கின்களை உருவாக்கிய அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி பிரீத்தி ராமதாஸ் உள்பட பல்வேறு துறையில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நிறுவனத்தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில், ‘ஆண்டுதோறும் சாதனை பெண்கள் விருது விழாவை நடத்துவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளர்களை அடையாளம் கண்டு விருது வழங்குகிறோம்’ என்றார்.

Next Story