அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது


அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 March 2019 11:15 PM GMT (Updated: 2019-03-13T02:39:40+05:30)

சென்னையில் இன்று நடைபெறும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

சென்னை,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ்(புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா. இன்று இணைய இருக்கிறது. ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க. வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறது.

அ.தி.மு.க. அலுவலகத்தில்...

இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று(புதன்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

தொகுதிகள் பட்டியல்?

கூட்டத்தில் யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகள்? என்பது அடையாளம் காணப்பட இருக்கிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதையும் அ.தி.மு.க. கேட்டு தெரிந்து வைத்திருப்பதால் சுமுகமாக தொகுதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

எனவே இந்த கூட்டத்தின் இறுதியில் அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியல் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

Next Story