பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை,
கி.வீரமணி (திராவிடர் கழகம்):-
பொள்ளாச்சி சம்பவம் வளர்ந்த ஒரு சமுதாயத்தில் நாம் இருக்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி வெட்கமடைய செய்கிறது. இந்த விவகாரத்தில் வழக்கு என்ற பெயரால் பல யுக்திகளை கையாண்டு காலத்தை நீட்டிக்காமல், நிர்பயா வழக்கில் நடந்ததுபோல வெகுவிரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஜி.கே.வாசன்(தமிழ் மாநில காங்கிரஸ்):-
கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டம்-ஒழுங்கை இன்னும் கடுமையாக பயன்படுத்த வேண்டும்.
தொல்.திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள்):-
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டிக்கும் வகையில் 14-ந்தேதி (நாளை) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு):-
பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. இந்த கொடுமைகள் காவல்துறை, ஆளும் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடனேயே நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு):-
பெண்களுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகளை அறியும்போது சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் செத்துவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த சமூக விரோத கும்பலின் செயலுக்கு அரசியல் அதிகாரத்தில் உள்ளோர் ஆதரவு இருப்பதாகவும் சந்தேகம் எழுகிறது. எனவே நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
டி.டி.வி.தினகரன்(அ.ம.மு.க.):-
பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு தொடர்பில்லை என்று அவசர அவசரமாக போலீஸ் அதிகாரி மறுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.
ஏ.சி.சண்முகம்(புதிய நீதிக்கட்சி):-
பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு காதல் வலைவீசி அதில் ஏமாறும் பெண்களை பாலியல் கொடுமை செய்யும் செயல்கள் அதிகமாகி விட்டது. இந்த குற்றங்களை அரங்கேற்றுவோரை தண்டிக்க இப்போதுள்ள சட்டங்கள் போதாது. சமுதாயத்தை சீரழிக்கும் இவர்களை போன்ற தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
இதுதவிர கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், தமிழ் பேரரசு கட்சி தலைவர் வ.கவுதமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் உள்பட பலரும் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story