போலீசார் கைது செய்ய முயற்சி? நடிகர் விமல் தலைமறைவு
தெலுங்கு நடிகரை தாக்கிய வழக்கில் போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதையடுத்து நடிகர் விமல் தலைமறைவாகி விட்டார்.
சென்னை,
நடிகர் விமல் குடிபோதையில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக தெலுங்கு நடிகர் அபிஷேக் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். ஆஸ்பத்திரிக்கு சென்றும் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விமல் மீது போலீசார் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக விமல் கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புகார் குறித்து விமலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு நேரில் சென்றும் அழைத்தனர். அப்போது விமல் நீங்கள் செல்லுங்கள், நான் பின்னால் வருகிறேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விமல் தலைமறைவு
ஆனால் சொன்னபடி போலீஸ் நிலையத்துக்கு அவர் வரவில்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து விமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. எனவே விமலை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எங்கே நடக்கிறது? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
தெலுங்கு நடிகரை விமல் தாக்கினாரா? என்பதை அறிய சம்பவம் நடந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story