வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை தேர்தலுக்கு முன் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் முதல் நாளிலேயே சரியான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.57 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூரில் மட்டும் ஒரு காரில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு ஆவணங்கள் இருந்தால் அதை ஆய்வு செய்து திருப்பி அளிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டிருந்த 2,653 சுவர் விளம்பரங்கள், 5,237 போஸ்டர்கள், 1,561 பேனர்கள் என மொத்தம் 11,375 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவுத் தொகை, அந்தந்த கட்சிகளின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். மேலும் விளம்பரம் தொடர்பாக 3,088 புகார்கள் வந்துள்ளன. அவற்றையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. மதுரை கலெக்டர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி இதுபற்றி விவாதித்துள்ளார். அவர்கள் அளித்த கருத்துக்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளார்.
ஐகோர்ட்டிலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும்போது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். அங்குள்ள நிலைமை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளோம். காவல்துறை சார்பிலும் கோர்ட்டில் அறிக்கை அளிக்கப்படும்.
கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். புனித வெள்ளி, ரம்ஜான் மாதம் ஆகிய நிகழ்வுகளை குறிப்பிட்டு தேர்தலை மாற்றுத்தேதியில் நடத்த வேண்டும் என்றும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
3 தொகுதி இடைத்தேர்தல்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை பொறுத்தவரை, சரவணன் மனுவை திரும்ப பெற்றுவிட்டாலும் கோர்ட்டின் உத்தரவு கிடைக்க வேண்டும். அதன்பின் தான் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான நிலைபற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும்.
வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும் பிரமாண பத்திரத்தில் அளிக்க வேண்டும். புதிய நடவடிக்கையாக, சுயேச்சை வேட்பாளர் தான் தண்டனை பெற்ற வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை உள்ளூர் பத்திரிகைகள் மற்றும் டி.வி.யில் விளம்பரமாக அளிக்க வேண்டும்.
குற்ற வழக்குகள்
அரசியல் கட்சி வேட்பாளர்கள் குறித்த விளம்பரங்களை அந்தந்த கட்சிகளே வெளியிட வேண்டும். வேட்பாளராக அறிவித்ததில் இருந்து வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை 3 முறை விளம்பரம் வெளியிட வேண்டும். இதற்கான செலவுகள் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
15-ந் தேதி வருகை
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டால், அந்த தகவல்கள் பற்றி அதற்கான குழு ஆய்வு மேற்கொள்ளும். அது உண்மையிலேயே அவதூறான தகவல் என்றால், அந்த பதிவை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்போம். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 15-ந் தேதி வருகிறார்கள். ஒரு கம்பெனியில் 180 முதல் 200 வீரர்கள் வரை இருப்பார்கள். அவர்களை தேவையான பகுதிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story