ராகுல்காந்தி திடீர் சென்னை வருகையால் தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம்
ராகுல்காந்தி திடீர் சென்னை வருகையால் தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர, ஏனைய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டன. எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்தது.
ராகுல்காந்தி திடீர் சென்னை வருகை
தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து பேசினாலும், முடிவு எட்ட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், நாகர்கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வருகைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையை முடித்து தொகுதிகள் பட்டியலை வெளியிட தி.மு.க. திட்டமிட்டிருந்தது.
ஆனால், நேற்று திடீரென ராகுல்காந்தியின் வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவர் சென்னை வந்து 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகே நாகர்கோவில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார்
இதனால், நேற்று இரவு தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை. இன்றும் நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் செல்ல இருப்பதால், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு இல்லை.
எனவே, நாளை (வியாழக் கிழமை) காலை சென்னை அண்ணா அறிவாலயம் வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். தற்போதைய நிலையில், கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, திருச்சி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதால் சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story