பிளஸ்-2 பொதுத்தேர்வு: வேதியியல் பாடத்தில் கடினமான கேள்விகள் 100 மதிப்பெண் எடுப்பது குறையும்
பிளஸ்-2 வேதியியல் பொதுத்தேர்வில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய வினாக்கள் கடினமாக இருந்தது என்றும், 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பது கஷ்டம் என்றும் மாணவ-மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், வணிகவியல், இயற்பியல், பொருளாதாரம் உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிந்து இருக்கிறது.
நேற்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, பிற்பகல் 12.45 மணிக்கு முடிந்தது.
வினாக்கள் கடினம்
இதில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். வினாத்தாளில் 2 மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய 24-வது வினாவும், அதேபோல் 3 மதிப்பெண் வினாக்களில் 33-வது வினாவும் கடினமாக கேட்கப்பட்டதாகவும், ஒரு மதிப்பெண் வினாக்களிலும் சில வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்த வினாக்களினால் வேதியியல் பாடத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பது கஷ்டம் என்றே மாணவ-மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர். மேலும், கடந்த 11-ந் தேதி நடந்த தேர்வுக்கு பிறகு ஒருநாள் இடைவெளியில் அடுத்த தேர்வை வைத்ததால் மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டதாக சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
100-க்கு 100 மதிப்பெண்
கணக்கு பதிவியல் தேர்வை பொறுத்தவரையில், அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டு இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இந்த தேர்வில் பெரும்பாலான மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர்.
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக வேதியியல் பாடத்தில் 2 தனியார் பள்ளி மாணவர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒரு தனியார் பள்ளி மாணவரும், ஒரு தனித்தேர்வரும் பிடிபட்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல், சிறப்பு தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.
Related Tags :
Next Story