பொள்ளாச்சியில் கைதான கும்பலிடம் சிக்கிய பெண் டாக்டர்கள், ஆசிரியைகள்... ஆபாச படம் எடுத்து மிரட்டி பல கோடி ரூபாய் பறித்த பரபரப்பு தகவல்


பொள்ளாச்சியில் கைதான கும்பலிடம் சிக்கிய பெண் டாக்டர்கள், ஆசிரியைகள்... ஆபாச படம் எடுத்து மிரட்டி பல கோடி ரூபாய் பறித்த பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 14 March 2019 4:30 AM IST (Updated: 14 March 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை எழிலுடன், தென்னை விவசாயத்தால் பொருளாதார செழிப்புடன் திகழும் பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தில் குட்டி கோடம்பாக்கமாகவே உள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துமுகாமிட்டவர்கள்தான். விவசாயம் சார்ந்த தொழிலில் தனது விலாசத்தை காட்டி நிற்பதால், கிராமங்களை உள்ளடக்கியதாகவே பொள்ளாச்சி உள்ளது. இத்தகைய இயற்கை தந்த பரிசாக விளங்கும் பொள்ளாச்சி பூமியில், இயற்கை வாழ்வியலை கொடூரமாக சிதைக்கின்ற வகையில், சமீபத்தில் பாலியல் வன்கொடுமை அரங்கேறி உள்ளது. இது பெண்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. பச்சைபோர்வை போர்த்திய பசுமைநகருக்குள் படம் எடுத்து ஆடிய நச்சு பாம்புகளின் பல்லை பிடுங்குவதில் போலீசார் இறங்கி உள்ளனர்.

ஆபாச படத்தை காட்டி மிரட்டல்

ஆம்... நாகரிக உச்சமாக திகழும் முகநூல் (பேஸ்புக்) என்கிற வலையில் விழுந்த பெண்கள் பலர், தங்களது வாழ்க்கையை தொலைத்து நிற்கும் பரிதாபம் தான் இது. முகம் பார்த்து பழகாமல், அகம்பார்த்து பழகாமல், முகநூல் மூலம் பழகி, முதலில் நட்பு என்று சொல்லி, பின்னர் காதல் என்று கதை விட்டு, காலம்பார்த்து கற்பை சூறையாடும் காமுக கும்பலின் அட்டூழியம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் புகாரால் தோலுரித்து காட்டப்பட்டது. இதனால் தென்னை நகரம் பேரிடி தாக்கியதுபோல், கஜாபுயல் தாக்குதலை விட, கடும் தாக்குதலில் பெரும் சோகத்தில் மிதக்கிறது. இந்த பாலியல் விவகாரம் தமிழகம் முழுவதும் பற்றி எரியும் காட்டுத்தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் களப்போராட்டங்களில் ஈடுபட்டு காட்டி வருகின்றனர். இருந்தபோதும் களங்கத்தை துடைக்க முடியாத வகையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பதில்பேச முடியாமல் பரிதவிக்கின்றனர்.ஆம்...அந்த கும்பல் பொள்ளாச்சி மண்ணின் மைந்தர்கள்தான். தென்னையப்பெத்தா இளநீரு...பிள்ளையப்பெத்தா கண்ணீரு என்கிற வகையில் அந்த கும்பலை பெற்றவர்களும், அவர்கள் செய்த காரியத்தால் அதிர்ந்து, நிலை குலைந்து போய் உள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் பேஸ்புக் (முகநூல்) மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோருடன் காத்திருந்தார். பின்னர் மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையில் மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

திருநாவுக்கரசு கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அதை தொடர்ந்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கொலை மிரட்டல் வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிவண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு திருப்பதியில் இருந்து மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்த போது தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியை

சினிமாப்படப்பிடிப்புகள் நடந்து வரும் பொள்ளாச்சி மண்ணில் சினிமாவை மிஞ்சும் வகையில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

இந்த வழக்கில் தொடர்புடைய சபரிராஜன் முகநூலில் (பேஸ்புக்) தனது அழகான படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் சபரிராஜன் என்கிற தனது பெயரை ரிஸ்வந்த் என மாற்றி உள்ளதாக தெரிகிறது. முகநூல் மற்றும் தனது நண்பர்கள் மூலம் சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் செல்போன் எண்ணை வாங்கி விடுவார்கள். பின்னர் சரளமாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் பெண்களை தன் வலையில் வீழ்த்திவிடுவார்.

ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவரின் செல்போன் எண்ணை சபரிராஜன் மாலை 5 மணிக்கு வாங்குகிறார். எண்ணை வாங்கி 2 மணி நேரத்தில் அந்த ஆசிரியை மயங்கி, அவரது வீட்டிற்கு சென்று விடுகிறார். அங்கு அவருடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து, தொடர்ந்து அந்த ஆசிரியையை தன் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டு உள்ளார்.

வீடியோ வெளியானது

இதேபோன்று பெண்களை எளிதில் பேசி மயக்கும் சபரிராஜன் ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் தோட்டத்து வீட்டுக்கு பெண்களை காரில் அழைத்து செல்வார். இதற்கு திருநாவுக்கரசின் சொகுசு காரை பயன்படுத்தி உள்ளனர். அந்த கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். இதனால் உள்ளே யார்? இருக்கிறார் என்பது தெரியாது. இதுதொடர்பாக வெளியான ஒரு வீடியோ பதிவில் முதலில் அறைக்குள் சபரிராஜன் அழைத்து செல்கிறார். அந்த பெண் எதிர்பார்க்காத தருணத்தில் முத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு அந்த பெண்ணின் மேலாடையை களைகிறார். அதற்கு அந்த பெண் வேண்டாம் ரிஸ்வந்த், இங்கிருந்து அழைத்து சென்று விடு என்கிறார். அதற்குள் சொல்லி வைத்தது போன்று திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் செல்போனில் படம் பிடித்தவாறு உள்ளே வருகின்றனர். அந்த பெண் அண்ணா என்னை விட்டு விடுங்கள். தெரியாமல் வந்து விட்டேன் என்று கதறுகிறாள். ஆனால் கல்நெஞ்சக்காரர்கள் அந்த பெண்ணை விடாமல் துன்புறுத்துக்கின்றனர். மற்றொரு வீடியோவில் ஒரு கும்பல் இளம்பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் அந்த கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ரிஸ்வந்த் உன்னை நம்பி தானே வந்தேன். ஏன் என்னை இப்படி செய்கிறீர்கள்? என கதறுவதும் படமாக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையை சேர்ந்த பெண் டாக்டர்

இதேபோன்று மற்றொரு வீடியோவில் சபரிராஜன் ஒரு பெண்ணின் மேலாடையை களைகிறார். அப்போது பின்புறமாக கையை கொண்டு சென்று வெளியில் நிற்கும் நண்பர்களுக்கு சைகை மூலம் உள்ளே வாருங்கள் என்கிறார். பின்னர் அவர்கள் உள்ளே வருவது போன்ற வீடியோ பதிவும் சிக்கி உள்ளது. என்ஜினீயரான சபரிராஜனின் மயக்கும் பேச்சு, அவரது அழகான புகைப்படத்தை பார்த்து ஏராளமான மாணவிகள், பெண்கள் ஏமாந்து உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை 4 நாட்கள் வரை தங்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அவரிடம் ஆபாசபடத்தை காட்டி பல லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் கோவையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியரும், பொள்ளாச்சியை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரது மனைவியும், தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கும்பல் வசதியான வீட்டு குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளை குறி வைத்தே இதில் ஈடுபட்டு உள்ளனர். ஏனென்றால் பணக்கார வீட்டு பெண்கள் புகார் கொடுக்க வர மாட்டார்கள் என்ற தைரியத்திலும், செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்ற கோணத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

நகை-பணம் பறிப்பு

இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்து உள்ளது. தற்போது ஒரு மாணவி துணிச்சலாக புகார் கொடுக்க வந்ததால் இந்த ஆபாச கும்பல் பற்றிய விவரங்கள் வெளியே வந்துள்ளது. இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் 50 வீடியோக்கள் வரை ஆதாரமாக கிடைத்துள்ளது. மேலும் பெரும்பாலான வீடியோக்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அந்த செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப பெற்று, அதில் உள்ள பெண்கள் குறித்து அடையாளம் காணப்படும். மேலும் அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஆனைமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டு உள்ளார். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வழக்கின் முக்கியத்துவம் குறித்தும் அந்த பெண்ணுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆபாச படத்தை வைத்து மிரட்டி மீண்டும் அவர்களை வரவழைத்தும் குரூப்பாகவும், தனி, தனியாகவும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

அந்த பெண்களிடம் இருந்து நகை, பணத்தையும் பறித்ததாகவும் தெரிகிறது. மேலும் ஒரு சில பெண்களை பொள்ளாச்சியில் உள்ள முக்கிய நபர்களுக்கு விருந்தாக்கி அதன் மூலம் அந்த கும்பல் பணம் சம்பாதித்து உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். கைப்பற்றிய வீடியோவில் ஒரு இளம்பெண் இருக்கிறார். அவர் யார்? என்பது குறித்து அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவரும் புகார் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

செக்ஸ் நெட் ஒர்க்

பேஸ் புக் மூலம் வீழ்த்தப்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் ஒருபுறம். ஆபாசபடத்தில் சிக்கிய பெண்கள் மறுபுறம். சிற்றின்பத்தில் வீழ்ந்து யாரை நாடினால் தங்களது இச்சைக்கு வடிகால் தேடலாம் என்று கையில் பணத்துடன் ஏங்கிகொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு புறம். இவர்களை வைத்து படம் எடுத்து ஆடி இருக்கின்றன இந்த நச்சுபாம்புகள். இந்த செக்ஸ் நெட் ஒர்க்கில் விழுந்தவர் தான் ஒரு டாக்டரின் மனைவி. உடலுக்கு மசாஜ் என்று போனவர் குறுகிய நாட்களில் குரூப் செக்சுக்குள் விழுந்தார். ஒரு கட்டத்தில் மீளமுடியாத சொர்க்கம் என்ற நிலை ஏற்பட்டபோது அவரை மீட்கவும், அவரது ஆபாச படங்களை கைப்பற்றவும் ரூ.60 லட்சம் வரை கைமாற வேண்டியதாயிற்று. இன்னொரு பிரமுகருக்கு செல்லும் இடமெல்லாம் துணை வேண்டும். இதற்கு பெண்களை அனுப்பிவைத்து காசு பார்த்ததோடு, பிரமுகர் ஒதுங்கி போனாலும் பணத்துக்காக தொடர்ந்து அவரை மிரட்டி கொண்டு இருக்கிறது அந்த கும்பல். இதேபோல காசுகிடைத்தால் போதும் என்று இந்த கும்பலை நாடி வந்த பெண்களும் உண்டு. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு பண்ணை வீடுகளில் பல நாட்கள் உல்லாச ஓய்வு எடுத்தவர்களும் உண்டு. துணை நடிகைகளை அழைத்துவந்து இவர்களிடம் அடைக்கலம் கேட்டு தங்கி இருந்து பின்னர் மிரட்டப்பட்டவர்களும் உண்டு. ஆசிரியைகள், மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் என்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கி உள்ளனர். போலீசாரின் கிளறலில் இது முழுக்க வெட்ட வெளிச்சமாகும் என்று தெரிகிறது.

அழிக்கப்பட்ட வீடியோக்கள்

இந்த சம்பவத்தில் 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் கோவையில் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அனைவரின் கையில் இருப்பது ஆன்ராய்டு செல்போன்தான். இந்த செல்போனில் மெமரி கார்டு போட்டுக்கொள்ளக்கூடிய வசதி இருக்கிறது. அந்த கார்டின் சேமிப்பு திறனை பொறுத்து அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்க முடியும். அதுபோன்று செல்போனிலும் சேமித்து வைக்கக்கூடிய வசதியும் இருக்கிறது.

இதில் செல்போனில் சேமித்து வைத்து இருக்கும் வீடியோ, புகைப்படங்களை நாம் அழித்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது. ஆனால் மெமரி கார்டில் புகைப்படங்கள், வீடியோக்களை சேமித்து வைத்து இருந்தால் அதை அழித்தாலும் தேவைப்படும்போது திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக மெமரி கார்டு ரெக்கவரி என்ற தனி சாப்ட்வேர் உள்ளது. இதை பொருத்த ரூ.15 ஆயிரம் செலவு ஆகும். இந்த சாப்ட்வேர் பொருத்தியதும், நாம் ஒரு மெமரி கார்டை நாம் எந்த வருடத்தில் வாங்கி இருந்தாலும், அதில் சேமித்து வைத்து இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை எப்போது அழித்து இருந்தாலும் அதை திரும்ப பெற முடியும்.

இந்த சாப்ட்வேரை வாங்க சில நிபந்தனைகளும் உள்ளன. எனவே இதை யாரும் வாங்கி வைப்பது இல்லை. தேவைப்படுவோர் மட்டும் அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். ஆகவே இந்த சாப்ட்வேர் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப பெற்று அதில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்கு மூலம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

வீடியோக்களை வைத்து பேரம்

இதற்கிடையில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்து உள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருநாவுக்கரசை போலீசார் கைது செய்ததால் இந்த வழக்கு முடிந்து விட்டது என்று போலீசார் நினைத்தனர். இதனால் அந்த வீடியோக்களை வைத்து அதில் உள்ள முக்கிய நபர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் வழக்கில் சேர்க்காமல் இருக்க பண பேரம் பேசுவதாகவும் தெரிகிறது. டாக்டர் ஒருவரிடம் இருந்து மட்டும் ரூ.60 லட்சம் வரை போலீசாருக்கு கைமாறியதாக பேசப்படுகின்றது. எனவே இந்த வழக்கை நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story