திருவேற்காட்டில் துணிகரம் டாக்டர் வீட்டில் 170 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவேற்காட்டில் துணிகரம் டாக்டர் வீட்டில் 170 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 March 2019 9:00 PM GMT (Updated: 13 March 2019 8:34 PM GMT)

திருவேற்காட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 170 பவுன் தங்கநகை மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி,

திருவேற்காடு கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி பகுதியில் வசித்து வருபவர் சந்தானமுத்து. இவரது மகன் சித்தார்த்தன் (வயது 30). சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சந்தானமுத்துவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் வீட்டில் இருந்த சித்தார்த்தின் தாயார் ஜெயலட்சுமி மற்றும் தாத்தா, பாட்டி என அனைவரும் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

170 பவுன் நகை கொள்ளை

நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது டாக்டர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 170 பவுன் தங்கநகைகள், வெள்ளி மற்றும் வைர நகைகளையும், ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து மர்மநபர் களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவேற்காடு பகுதியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story