‘அ.தி.மு.க. கூட்டணி வெற்றியே ஜெயலலிதாவுக்கு செலுத்தும் அஞ்சலி’ மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு
நம்முடைய கூட்டணி வெற்றி பெறுவது ஜெயலலிதாவுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பங்கேற்று பேசியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதற்காக எங்களோடு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இணைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்திருப்பது, பிரமாண்ட வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை நீண்ட காலமாக ஆட்சி செய்தவர் மட்டும் இல்லை, மக்களுக்காக நலத்திட்டங்களை கொடுத்தவர். அவர் இல்லாதது வெற்றிடமாக தெரிகிறது. நம்முடைய கூட்டணி வெற்றி பெறுவது ஜெயலலிதாவுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
நரேந்திர மோடி இந்தியாவில் மட்டுமல்ல, உலகமே மதிக்கும் வகையில் உயர்ந்திருக்கிறார். நம்முடைய மெகா கூட்டணி அத்தனை இடங்களிலும் வெற்றி பெறும். ஏழை-எளிய மக்கள், விவசாயிகளின் எதிர்கால நலன் கருதி மத்திய அரசும், மாநில அரசும் ரெயிலின் சக்தி வாய்ந்த இரட்டை என்ஜின் போல செயல்படுகின்றன. இதற்காகவே கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story