மாநில செய்திகள்

ரபேல் போர் விமான பேரம்:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மோடி தண்டிக்கப்படுவார்சென்னையில் ராகுல்காந்தி பேட்டி + "||" + Rahul Gandhi interview

ரபேல் போர் விமான பேரம்:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மோடி தண்டிக்கப்படுவார்சென்னையில் ராகுல்காந்தி பேட்டி

ரபேல் போர் விமான பேரம்:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மோடி தண்டிக்கப்படுவார்சென்னையில் ராகுல்காந்தி பேட்டி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்படுவார் என்று ராகுல்காந்தி கூறினார்.
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி இதுபோல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை. அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல்காந்தி அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையாதா? இந்த தேர்தலில் வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக நீங்கள் கூறினாலும், இந்த பிரச்சினைகளில் நீங்கள் என்னென்ன செய்ய இருக்கிறீர்கள்?

பொருளாதார வளர்ச்சி

பதில்:- பல மாநிலங்களில் கூட்டணியை உருவாக்கிவிட்டோம். தமிழ்நாடு, மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உருவாக்கியிருக்கிறோம். பீகாரில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. காஷ்மீரில் பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரவுள்ளன. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்கின்றன.

பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் ஒற்றுமையைப் பொறுத்து அமைகிறது. இந்த அடிப்படையை பா.ஜ.க., பிரதமர் விளங்கிக்கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு இடையே சண்டையிட்டுக்கொண்டு, பிரிந்திருக்கிற நாட்டில் வளர்ச்சி இருக்காது.

ஜி.எஸ்.டி. விஷயத்தில் பிரச்சினைகள் உண்டு. அதை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறோம். குறைந்த வரிகள் மூலம் எளிதான ஜி.எஸ்.டி.யாக உருவாக்க விரும்புகிறோம்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோர் தற்போது கடுமையான தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், குழப்பமான ஜி.எஸ்.டி. யாலும் தாக்கப்பட்டனர். சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சி, சுயதொழில் ஆகியவற்றை எளிதாக்குவது பற்றிய திட்டங்கள் குறித்து எங்களின் தேர்தல் அறிக்கையில் இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிவிப்போம்.

புலவாமா தாக்குதல்

கேள்வி:- புலவாமா தாக்குதல், பாலகோட் விமான தாக்குதல் ஆகியவற்றுக்கு பிறகு உங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு சவால் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா?

பதில்:- காஷ்மீரில் 45 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன செய்தது என்பது கேள்வி. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்கிறது.

புலவாமா குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்த நபர் மசூத் அசார். அவரை பா.ஜ.க. அரசுதான் விடுவித்திருந்தது. பாகிஸ்தான் காந்தகாருக்கு அனுப்பி வைத்தது. ஒரு குற்றவாளியை திருப்பி அனுப்பியது ஏன் என்பதை பா.ஜ.க.தான் விளக்க வேண்டும்.

வேலையில்லா திண்டாட்டம்

‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டான்ட் அப் இந்தியா’ போன்றவை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் போலியான அறிக்கைகள். கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருந்துள்ளது என்பதுதான் உண்மை நிலை. இதுதான் இந்த தேர்தலில் முன்னிறுத்தப்பட போகிறது.

தமிழக விவசாயிகளுக்கு ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது என்பதை யாரும் மறக்கவில்லை. விவசாயிகளுக்கு மிகப்பெரிய அவமரியாதையை பா.ஜ.க. அரசு செய்துள்ளது.

ரிமோட் கண்ட்ரோல் அசைவில் தமிழகம்

சி.பி.ஐ. இயக்குனர் இரவோடு இரவாக மாற்றப்படுகிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரியை கேட்காமலேயே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதனால் அவர் பதவி விலகும் சூழ்நிலை உருவானது. இப்படி ஏராளம் உள்ளன.

தமிழ் கலாசாரம், தமிழ் மொழி மீது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிமைகள், கருத்துகள் உள்ளன. ஆனால் பிரதமரின் ரிமோட் கண்ட்ரோல் அசைவில் தமிழகம் உள்ளது. மாநிலத்தை பிரதமர் நடத்தக்கூடாது. இதைத்தான் நாங்களும் தி.மு.க.வும் எதிர்க்கிறோம். இது தமிழக மக்களை கேலி செய்வதாகும்.

தமிழ் மொழி, கலாசாரம், மாணவர்கள் மீது தேவையில்லாத திணிப்பு ஏற்படுத்தப்படுகிறது என்பதை மக்களும், மாண வர்களும் உணர்ந்துள்ளனர். இது துரதிருஷ்டவசமானது.

ஏன் மறைகிறார்?

அதோடு, ஒவ்வொருவரும் சண்டையிட்டுக்கொள்ளும் நிலையை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி வைத்திருக்கிறார். எனவே ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் பேச்சுவார்த்தை என்றாலே பிரதமர் நரேந்திர மோடி ஏன் பயப்படுகிறார்? ஏன் அவர் என்னுடன், பத்திரிகையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது? மாணவர்களுக்கு முன்பு நான் பேசினேன். அதற்கு அவருக்கு தைரியம் உள்ளதா? ஏன் அவர் மறைந்துகொள்கிறார்?

குறைந்தபட்ச வருமானம்

கேள்வி:- ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற பல பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் என்ன செய்ய நீங்கள் வாக்குறுதி அளிக்க இருக்கிறீர்கள்?

பதில்:- உள்ளூர் பிரச்சினைகள் பற்றி இங்குள்ளவர்கள் பதில் அளிப்பார்கள். தேசிய அளவில், எங்களிடம் பிரச்சினைகளின் தீர்வுக்கு புரட்சிகரமான திட்டங் கள் உள்ளன. அதன்படி குறைந்தபட்ச அடிப்படை வருமான உத்தரவாத திட்டம் என்ற புரட்சிகரமான திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம்.

அதாவது, 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் குறைந்தபட்ச வருமானம் இல்லாதவர்கள் எவருமே இருக்க முடியாது. அது எவ்வளவு என்பது பின்னர் முடிவு செய்யப்படும். அதன்படி வங்கி கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்பட்டுவிடும்.

சீன தயாரிப்புகளைப் போல இங்கும் தயாரிப்பு தொழிலில் ஈடுபட முடியும் என்பதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள். உற்பத்தி துறையில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், இங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோருக்கு காங்கிரஸ் அரசு தேவையான ஆதரவை அளிக்கும்.

வேலை வாய்ப்பை உருவாக்கும் உற்பத்தி மையமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்

எல்லா அரசு நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் அடிப்படை கொள்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.தான் நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். திட்டக் கமிஷனை கலைத்தனர். இந்திய ரிசர்வ் வங்கியை முடக்கினர். பொருளாதார வளர்ச்சியில் இங்கு ஸ்திரத்தன்மை இல்லை.

விவசாய கடன்

கேள்வி:- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுமா?

பதில்:- சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 10 நாட்களில் வங்கி கடன்களை ரத்து செய்வோம் என்று கூறி அதை நிறைவேற்றினோம். விவசாயிகள் இல்லாமல் நாடு இல்லை என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதை பா.ஜ.க. நம்புவதில்லை. எனவேதான் விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கென்று தனி துறையை அமைப்போம். காவிரி பிரச்சினையில் தீர்வு எட்டப்படும்.

ரபேல் விவகாரம்

கேள்வி:- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மாற்றம் இருக்குமா? என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

பதில்:- ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை பொறுத்தவரை, அந்த விமானத்தின் செயல்பாடுகளைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. ஆனால் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு பல கோடி பணம் வந்ததா என்பதுதான் பிரதமர் மோடியிடம் நாங்கள் கேட்கும் ஒரே கேள்வி.

இதில் நாங்கள் கேட்பதெல்லாம், இதில் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ரபேல் ஒப்பந்தம் விலக்கப்படுமா என்றால், அது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். அதற்கு தகுந்த பதிலளிப்பதற்கு என்னிடம் இப்போது அதுதொடர்பான தகவல்கள் இல்லை.

ஆனால் ஊழல் பற்றிய கேள்விக்கு பதில் உண்டு. நிச்சயம் அதுபற்றி நாங்கள் விசாரணை நடத்துவோம். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் தண்டிக்கப்படுவார்கள்.

பிரதமர் யார்?

கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணி, நரேந்திர மோடியை பிரதமராக முன்னிறுத்துகிறார்கள். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதமர் யார் என்பது முன்னிறுத்தப்படவில்லையே?

பதில்:- பிரதமர் நரேந்திர மோடியையும், ஆர்.எஸ்.எஸ்.ஐயும் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்து யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் கடமை.

ராஜீவ்காந்தி படுகொலை

கேள்வி:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- எனது தந்தையின் படுகொலையை பொறுத்தவரை, எனது குடும்பம் மற்றும் எனக்கு அது தனிப்பட்ட விஷயமாகும். அதை நாங்கள் கையாண்டோம். அதில் இப்போது எங்களுக்கு யார் மீதும் குரோதம் இல்லை.

ஆனால் அந்த படுகொலையில் சட்டம் சார்ந்த விவகாரமும் உள்ளது. சட்டம் சார்ந்த விஷயத்தை கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி:- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வியை மாநில அதிகாரத்துக்கு கொண்டு வருவீர்களா? நீட் தேர்வில் உங்கள் கருத்து என்ன?

பதில்:- நீட் விஷயத்தில் நிச்சயம் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதில் பாரபட்சம் இருப்பதாக உணரப்படுகிறது. ஆனால் அந்த பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படக்கூடிய ஒன்றுதான்.

தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி ஆகியவை மாநிலத்துக்கு உட்பட்டவைதான். அது மாநிலத்தின் அதிகாரத்தில்தான் இருக்கும். உயர் கல்விதான் மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் கல்வி முறைகளில் பா.ஜ.க. அரசு ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை புகுத்த கல்வி நிறுவனங்களை நிர்ப்பந்திப்பதை ஏற்க முடியாது.

பெண்கள் இடஒதுக்கீடு

கேள்வி:- பெண்களுக்கு எத்தனை இடத்தை காங்கிரஸ் கட்சி ஒதுக்க உள்ளது?

பதில்:- நாடாளுமன்றம், மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். தேசிய அளவில் மத்திய அரசு பணியிலும் அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரப்படும்.

கேள்வி:- தமிழகத்தில் காங்கிரஸ் தோழமைக் கட்சிகளுடன் இணைந்துதான் போட்டியிடும் நிலை உள்ளதே?

பதில்:- எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் மன ரீதியாக ஒரே எண்ண ஓட்டம் உள்ளது. எனவே நாங்கள் ஓரணியில் செயல்படுகிறோம். இந்த கூட்டணி பலமானது. எனவே இங்கு காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை.

கேள்வி:- இலங்கை தமிழர் படுகொலையில் தி.மு.க. உங்களை எதிர்த்ததே?

பதில்:- நான் பதிலளிக்கும் அளவுக்கு இந்த கேள்வியில் ஒன்றும் இல்லை. நாங்கள் தமிழர்களை நேசிப்பவர்கள். இது என்னை கேலி செய்யும் கேள்வியாகவே தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பேட்டி முடிந்ததும், தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா எழுதிய ‘மோடி- ஒரு பிழை’ என்ற புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டார்.