மாநில செய்திகள்

பொள்ளாச்சி அருகே விபத்து:வாய்க்காலில் கார் பாய்ந்துஒரே குடும்பத்தினர் 8 பேர் பலி + "||" + Canal Car flowing 8 members of the same family killed

பொள்ளாச்சி அருகே விபத்து:வாய்க்காலில் கார் பாய்ந்துஒரே குடும்பத்தினர் 8 பேர் பலி

பொள்ளாச்சி அருகே விபத்து:வாய்க்காலில் கார் பாய்ந்துஒரே குடும்பத்தினர் 8 பேர் பலி
பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். பழனிக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பொள்ளாச்சி,

கோவை மசக்காளிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவருடைய மனைவி சித்ரா (40). இவர்களுக்கு பூஜா (8), நந்தனா (3) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். பிரகாஷ் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பிரகாஷ், சித்ரா, அவர்களுடைய மகள்கள் பூஜா, நந்தனா மற்றும் பிரகாஷின் சகோதரர் பன்னீர்செல்வத்தின் மனைவி லதா (42), அவரின் குழந்தைகள் தாரணி (9), கவியரசு (11), பிரகாஷின் சகோதரி சுமதி (50) ஆகிய 8 பேர் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து காரில் பழனி சென்றனர். காரை பிரகாஷ் ஓட்டினார்.

வாய்க்காலுக்குள் கார் பாய்ந்தது

இரவு பழனி சென்ற அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர். கோவையில் உள்ள பன்னீர்செல்வத்துக்கு தாங்கள் புறப்பட்ட தகவலை தெரிவித்தனர்.

அவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் பொள்ளாச்சி-உடுமலை சாலையில் பொள்ளாச்சியை அடுத்த கெடிமேடு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்தது. பிறகு அங்குள்ள பி.ஏ.பி.(பரம்பிகுளம் - ஆழியாறு பாசனம்) வாய்க்கால் தடுப்புச் சுவரில் வேகமாக மோதி வாய்க்காலுக்குள் பாய்ந்தது.

வெளியே வரமுடியவில்லை

இந்த வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் 900 கனஅடி தண்ணீர் செல்கிறது. 15 அடி ஆழமுள்ள அந்த வாய்க்காலில் கார் விழுந்ததும், கார் என்ஜின் நின்றுவிட்டது. இதனால் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. அத்துடன் அதன் கண்ணாடிகளையும் திறந்து வெளியே வரமுடியவில்லை.

மேலும் கார் வாய்க்காலில் விழுந்த வேகத்தில் இடதுபுறம் பின்பக்க கண்ணாடி லேசாக உடைந்தது. அதன்வழியாக உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முயற்சி செய்தனர். எனினும் வாய்காலில் தண்ணீர் அதிகமாக சென்றதாலும், உடைந்த கண்ணாடி வழியாக காருக்குள் தண்ணீர் வேகமாக பாய்ந்ததாலும் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

8 பேர் பலி

எனவே காரை ஓட்டிய பிரகாஷ், அவருடைய மனைவி சித்ரா, மகள் பூஜா, சகோதரி சுமதி, பிரகாசின் சகோதரர் மனைவி லதா, அவருடைய குழந்தை தாரணி ஆகிய 6 பேரும் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். காரின் பின்பகுதியில் இருந்த கவியரசு, நந்தனா ஆகியோர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, அந்த பகுதி வழியாக நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து சென்றார். அவர் வாய்க்கால் பாலத்தின் ஒருபகுதி உடைந்து இருப்பதையும், அதன் அருகே காரின் சில பாகங்கள் உடைந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விரைந்தனர்

உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு, அதன் அருகே சென்று பார்த்தார். ஆனால் வாய்க்காலுக்குள் எதுவும் இல்லை. எனவே வலதுபுறம் சென்று பார்த்தபோது, அந்த பாலத்தின் அருகே பெண் ஒருவரின் உடல் மட்டும் கிடந்தது. அத்துடன் காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரிந்தது.

அதை பார்த்ததும் அவர் உடனடியாக இது குறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போதுதான் காருக்குள் மேலும் சிலர் பிணமாக இருப்பது தெரியவந்தது.

கார் மீட்பு

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரையும், அதற்குள் இருப்பவர்களையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டு இருந்ததால் அவர்களால் முடியவில்லை. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் அந்த வாய்க்காலுக்குள் இறங்கி, காரை சுற்றி கயிறு கட்டினார்கள். பின்னர் அந்த காரை கிரேன் மூலம் வெளியே தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

2 பேரின் உடல்களை தேடும் பணி

ஆனாலும் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதையடுத்து கடப்பாரை மூலம் காரின் கதவை நெம்பி, காருக்குள் இருந்த பிரகாஷ், அவருடைய மனைவி சித்ரா உள்பட 6 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட நந்தனா, கவியரசு ஆகியோரின் உடல்களை காணவில்லை. கோமங்கலம் போலீசார் மற்றும் பொதுமக்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அவர்களின் உடல்களை தேடி வருகிறார்கள்.

விபத்து குறித்து விசாரணை

விபத்து நடந்த இடத்தில் நேற்று காலை முதல் மீட்பு பணி நடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பொள்ளாச்சியில் இருந்து பழனி, உடுமலைக்கு செல்லும் வாகனங்கள் திப்பம்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை