தடை உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்படுகிறது என்றால் காஞ்சீபுரம், பல்லவ சாம்ராஜ்யத்தில் தான் இன்னமும் உள்ளதா? ஐகோர்ட்டு கேள்வி
ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்படுகிறது என்றால், காஞ்சீபுரம் மாவட்டம் இன்னமும் பல்லவ சாம்ராஜ்யத்தில் தான் உள்ளதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் சாலைகள், நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் பேனர் வைக்க தடை விதித்து ஐகோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த தடை உத்தரவை மீறி கோவை, சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகோர்ட்டு தடையை மீறி, அனுமதியில்லாமல் காஞ்சீபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ஏராளமான ‘பேனர்கள்’ வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
அதிகாரிகள் ஆஜர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி காஞ்சீபுரத்தில் முக்கிய வீதியான காந்தி சாலையில் ஆளுங்கட்சியினர் நடத்திய நிகழ்ச்சியில், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என கேட்டனர்.
பல்லவ சாம்ராஜ்யம்
மேலும், ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தும், அதை மீறி தொடர்ந்து சட்டவிரோதமாக காஞ்சீபுரத்தில் பேனர்கள் வைக்கப்படுகிறது என்றால், காஞ்சீபுரம் மாவட்டம் தமிழகத்தில் உள்ளதா? அல்லது இன்னமும் பல்லவ சாம்ராஜ்யத்தில் தான் தொடர்கிறதா?
அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது? அந்த சாலையில் செல்லும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சியினர் வைக்கின்ற பேனர்களை தடுக்க அதிகாரிகளால் முடியாதா? சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு தனிச்சட்டம் ஏதும் உள்ளதா? அந்த தனிச்சட்டத்தின்படி தான் அதிகாரிகள் செயல்படுகிறீர்களா? அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள் மெத்தனம்
தொடர்ந்து நீதிபதிகள், சென்னையில் விதிமீறல் பேனர்கள் இல்லை என்று அரசால் உறுதி அளிக்க முடியுமா? கடந்த 3-ந்தேதி எழும்பூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்காக விதிகளை மீறி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. அதுவும் காவல்துறைக்கு சொந்தமான எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திலேயே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர், விதிமீறல் பேனர்கள் தொடர்பாக காஞ்சீபுரம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. பேனர்கள் விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்று தெரிகிறது. எனவே, இந்த வழக்கிற்கு தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story