ரூ.78 கோடி வெளிநாட்டுக்கு முறைகேடாக பரிமாற்றம்: முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு 7 ஆண்டு சிறை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு


ரூ.78 கோடி வெளிநாட்டுக்கு முறைகேடாக பரிமாற்றம்: முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு 7 ஆண்டு சிறை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 March 2019 10:30 PM GMT (Updated: 13 March 2019 10:30 PM GMT)

வெளிநாட்டுக்கு ரூ.78 கோடியை முறைகேடாக பரிமாற்றம் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னை,

தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்து வந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன் (வயது 43). இவர், சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார். கடந்த 8.9.2016 முதல் 8.10.2016 வரை சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு வங்கியில் 8 வங்கி கணக்கில் இருந்து வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.78 கோடி அனுப்பி உள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணி அன்பழகன் முறையான ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக ரூ.78 கோடி பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்வதை தடுக்கும் சட்டத்தின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு மணி அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, குற்றம்சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மணி அன்பழகன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story