40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு


40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 14 March 2019 12:00 AM GMT (Updated: 2019-03-14T04:16:47+05:30)

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இன்னும் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாடு தனக்கான ஒரு புதிய பிரதமரை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக கடமை இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. இந்தியா யாரை பிரதமராக தேர்வு செய்ய இருக்கிறதோ, அந்த இந்தியாவின் இளம் பிரதமர் ராகுல்காந்தி இந்த மேடைக்கு வந்துள்ளார். அப்படி இந்தியாவின் பிரதமராக இருக்கிற உங்களை, தி.மு.க.வின் சார்பில் மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளின் சார்பில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

உறுதியோடு சொல்கிறேன், இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்தி தான். உங்கள் கையில் இந்திய தேசம் பாதுகாப்பானதாக, மதசார்பற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இருக்கிறது. நம்பிக்கை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் ஆசையுமாக இருக்கிறது. ஆசை மட்டுமல்ல, அதுதான் உண்மையாக ஏற்பட இருக்கிற வரலாறு என்பதை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.

ஒளிமயமான இந்தியா

அதனால் தான் நான் யாரும் சொல்வதற்கு முன்னால் துணிச்சலோடு சொன்னேன், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று. தனிப்பட்ட ஸ்டாலினாக இதை நான் சொல்லவில்லை. 5 முறை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி மகனாக இதை நான் சொன்னேன். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று அன்னை இந்திராகாந்தியை முன்மொழிந்த கருணாநிதி மகனாக நான் சொல்லி இருக்கிறேன்.

இந்தியாவின் மருமகளே வருக என்று 2004-ம் ஆண்டு அன்னை சோனியாவை முன்மொழிந்த கருணாநிதி மகனாக நான் சொல்லுகிறேன். இளம் தலைவர் ராகுலே, ஒளிமயமான இந்தியாவை தருக என்று நான் கூறுகிறேன். ஒளிமயமான இந்தியாவை தாருங்கள் என்று சொல்லுகிறபோது, இந்தியா இருள்மயமாகி இருக்கிறது என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிகிறது.

காமராஜர் பெயரைச் சொல்லி...

தற்போது திடீரென தலைவர் காமராஜரின் நினைவு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. 1966-ம் ஆண்டில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லி டெல்லியில் சங்பரிவார் அமைப்பினர் ஊர்வலத்தை நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் வன்முறையை தூண்டி விட்டார்கள். அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜரின் வீட்டுக்குள்ளே நுழைந்து தீவைத்த கொடுமையை செய்தனர். அப்படி பட்டவர்கள் காமராஜரைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? என்று நான் கேட்க விரும்புகிறேன். காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மோடி செய்ததுண்டா? அவர்கள் வடக்கே பட்டேல் பெயரை சொல்லியும், தெற்கே பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சொல்லியும் வாக்கு கேட்க நினைக்கிறார்கள்.

மோடியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. காரணம், உங்களுக்கு ஓட்டு வாங்க, மக்களிடம் ஆதரவு கேட்க உங்கள் கட்சி தலைவர்களின் பெயரை சொல்வதற்கு வக்கற்ற நிலையில் பா.ஜனதா இருக்கிறது. இதைவிட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது. தமிழகத்தில் மோடியின் எடுபிடி ஆட்சியாக, பினாமி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி என்பது கொத்தடிமையாக நடைபெறும் ஆட்சியாக இருக்கிறது. கொலை, கொள்ளை வழக்கு என மிரட்டி இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.-ஐ மிரட்டி பினாமி ஆட்சியை பா.ஜனதா ஆட்சி நடத்தி வருகிறது.

40 தொகுதிகளில் வெற்றி

பாசிச மோடியிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றப்போகிற ராகுல்காந்தியுடன் நாம் கைகோர்ப்போம். 2004-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வாங்கிக்கொடுத்த அணிதான் இந்த மேடையில் இருக்கிற அணி. இந்த தேர்தலிலும் 40-க்கு 40 என்ற வெற்றியை பெற்று உங்களை நான் டெல்லியில் வந்து சந்திப்பேன் என்ற உறுதியை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் ஆட்சி இன்னும் சில வாரங்களில் உங்கள் கைக்கு வரப்போகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்னார். உங்கள் ஆட்சி ஏழைகளுக்காக நடைபெறுகிற ஆட்சியாக இருந்திட வேண்டும்.

நான் சாமானியனுக்காக ஆட்சி நடத்துகிறேன் என்று சொன்னவர் தலைவர் கருணாநிதி. அதேபோல் சாமானியர்களுக்காக நடைபெறுகிற ஆட்சியாக அது அமைந்திட வேண்டும். அதை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் உங்களை ஆதரிக்க ஒரேயொரு காரணம் நீங்கள் மோடி அல்ல, நீங்கள் ராகுல்... ராகுல்... ராகுல்.. என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story