பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் பேட்டி


பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 9:06 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் கூறினார்.

கோவை,

பொள்ளாச்சியில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பொள்ளாச்சி அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நடத்தி வந்ததாக கூறப்பட்ட டாஸ்மாக் மது பாரும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது.நாகராஜுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்ய கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் நாகராஜ் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

வீடியோவில் இருப்பது நான் அல்ல

பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் ஆபாச வீடியோ வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் என்னை பிடிக்காத சிலர் சமூகவலைத்தளம் மற்றும் ஊடகங்கள் மூலமாக இந்த வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

வேறு யாரோ உள்ள ஆபாச வீடியோவை காட்டி நான் அதில் இருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என்மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். இதனை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பார் கிடையாது

அ.தி.மு.க.வில் பொள்ளாச்சி நகர பாசறை துணைச்செயலாளராக முன்பு இருந்தேன். இப்போது அந்த பதவியில் இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் மது பார் நடத்தி வந்தேன். இப்போது நான் பார் நடத்தவில்லை. சேதப்படுத்தப்பட்டது எனது பார் இல்லை.

இந்த வழக்கில் கைதான 4 பேர் எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியாது. பாலியல் வன்முறை சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story