விஜயகாந்த்-டாக்டர் ராமதாஸ் சந்திப்பின் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்


விஜயகாந்த்-டாக்டர் ராமதாஸ் சந்திப்பின் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 14 March 2019 11:30 PM GMT (Updated: 14 March 2019 9:22 PM GMT)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, 

தமிழக அரசியலில் எப்படி அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எலியும் பூனையுமான இருந்து வருகிறதோ, அதேபோலத் தான் அதிகாரத்தில் இல்லை என்றாலும் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றன. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் இரு கட்சிகளையும் இணைத்துவிட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் முதலிலேயே இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டும் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த கூட்டணியில் கடைசியில் இணைந்த தே.மு.தி.க.வும் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகள் கேட்டு முதலில் அடம்பிடித்து, பின்னர் இறங்கி வந்து 4 தொகுதிகளை பெற்றுக்கொண்டது.

சந்திப்பின் பின்னணி?

தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று திடீரென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லம் சென்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அவருடன் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் வந்திருந்தார்.

ஆனால், இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ், “விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். பா.ம.க. - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை” என்று கூறிச்சென்றார். ஆனால், விஜயகாந்தை டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசியதில் அரசியல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தே.மு.தி.க.வின் ஓட்டு தேவை

நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. எனவே, தே.மு.தி.க.வின் வாக்குகளை பெற வேண்டும் என்றால், அக்கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சாந்தப்படுத்துவது அவசியம். அந்த வகையிலேயே, டாக்டர் ராமதாஸ் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் 4-ல் வெற்றி பெற்றால், ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். எனவே, தே.மு.தி.க.வின் ஓட்டு எப்படியும் தேவை என்ற நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் தொகுதிகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு வடசென்னை தொகுதியும், பா.ம.க.வுக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விரும்புகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததற்கு முக்கிய காரணமே இவர் தான் என்று கூறப்படுவதால், அவரது ஆசையை நிறைவேற்ற பா.ம.க. முடிவு செய்துள்ளது.

மத்திய சென்னையை அ.தி.மு.க.வுக்கு கொடுத்துவிட்டு தே.மு.தி.க.விடம் உள்ள வடசென்னையை பெற்றுக்கொள்ள பா.ம.க. விரும்புகிறது. வடசென்னை தொகுதிக்கு பதிலாக தே.மு.தி.க.வுக்கு விழுப்புரம் தொகுதியை விட்டுக்கொடுக்கவும் பா.ம.க. முடிவு செய்திருக்கிறது. தொகுதி பங்கீட்டு பின்னணியிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story