வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பேசும் ராகுல் காந்தியால் எப்படி தேசிய தலைவராக முடியும்? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
வட இந்தியா, தென் இந்தியா என்று பிரித்து பேசும் ராகுல் காந்தியால் எப்படி தேசிய தலைவராக முடியும்? என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்தபோது, பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இந்த நிலையில், ராகுல்காந்திக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 10 கேள்விகளை கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
காவிரி பிரச்சினை
* தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சினை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையாவிடம் காவிரி நீரின் தமிழகத்தின் உரிமை பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா?.
* பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெயரை அறிவித்து தேர்தலை சந்திப்பது அராஜகம் என்று கூறும் ராகுல்காந்தி, சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசிய கட்சி இருப்பதும் நாட்டின் பிரதமராக இருப்பதும் ஒரு பெரிய அராஜகம் இல்லையா?
* ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் எனக்கூறும் ராகுல்காந்தி, கடந்த காலத்தில் உங்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் கூட்டாக ஊழல் நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா?
இந்தியாவை பிரித்து பேசுவதா?
* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேலூர் சிறையில் உங்கள் சகோதரி பிரியங்கா எதற்காக ரகசியமாக சந்தித்தார் என்பதை விளக்க முடியுமா?.
* இலங்கைத்தமிழர் படுகொலைக்கு பொங்கியவர்கள், கண்ணீர் விட்டவர்கள், கள்ளத்தோணியில் சென்றவர்கள், கோடம்பாக்கத்தில் சென்று சினிமா பாணியில் ராணுவ உடை வாங்கி பாவனை காட்டியவர்கள், எல்லாம் பொன்னாடை போர்த்தி தேர்தலுக்காக நாடகமாடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கேட்பது நியாயமா? அப்பாவி இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சியின் பங்கு எதுவுமில்லை என்று பதில் கூற உங்களுக்கு தைரியமிருக்கிறதா?.
* வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை 2 பிரிவுகளாக பிரித்து பேசும் ராகுல், நீங்கள் எப்படி தேசிய தலைவர் ஆவீர்கள்?.
* மதச்சார்பின்மையை ஆதரிக்கிறோம் எனக்கூறும் ராகுல், உங்கள் தமிழக கூட்டணி கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்று கேட்டீர்களா?
காமராஜரை ஒதுக்கி வைத்த கட்சி
* ஊழல் இல்லாத நல்லாட்சி புரிந்த காமராஜர் பெயரைச்சொல்லி மோடி ஓட்டுக் கேட்கிறார் என்று கூறுகிறீர்களே, அதே காமராஜரை ஒதுக்கி வைத்தது உங்கள் காங்கிரஸ் கட்சி தானே?
* பிரதமர் மோடியின் ‘மேக்கின் இந்தியா’ திட்டத்தை போன்றே ‘மேட் இன் தமிழ்நாடு’ என தமிழ்நாட்டை மாற்றுவோம் எனக்கூறும் ராகுல், புதிதாக வேறு ஏதேனும் திட்டத்தை துவக்க தெரியாதா? உங்கள் சொந்த தொகுதி அமேதியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளை பட்டியலிட முடியுமா? இதில் உங்கள் சொந்த தொகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் செய்யாமலே தமிழ்நாட்டை ‘மேட் இன் தமிழ்நாடு’ என மாற்றுவோம் எனக்கூறுவது நியாயமா?
* தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்களே, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கியது யார் என்று கூறமுடியுமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story