பறக்கும் படையினர் அதிரடி சோதனை: கேரள வியாபாரிகளிடம் ரூ.5¾ லட்சம் பறிமுதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பணம் சிக்கியது
சத்தியமங்கலம் அருகே காரில் வந்த கேரள வியாபாரிகளிடம் இருந்து ரூ.5¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதி இன்றி கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை அடிவாரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனை நடத்தினார்கள். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.5 லட்சத்து 84 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாட்டு வியாபாரிகள்
அதில் இருந்தது கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த மேத்தியோ (வயது 57), விஜீ(48), மற்றொரு விஜீ (46), ஜோகி (40), மோகன் (58), சஜி (48), மற்றொரு சஜி (49) என்பதும் மாட்டு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வாங்குவதற்கு பணம் கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த சித்தையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே சொகுசு காரில் வந்த கைத்தறி துறை அதிகாரி சிவானந்தத்திடம்(38) உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கட்டிட ஒப்பந்ததாரர்
விழுப்புரம் மாவட்டம் மூரார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குளிர்பான பாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே காட்டு மொகதும் பள்ளிவாசல் அருகே காரில் சென்ற கட்டிட ஒப்பந்ததாரரான ஜெயராமனிடம் (37) ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் காய்கறி வாங்குவதற்காக சென்ற கழுகுமலையைச் சேர்ந்த சேர்மகனியிடம் (35) ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் தஞ்சையை சேர்ந்த ரபேல் என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம், மன்னார்குடி
மன்னார்குடி உள்ளிக்கோட்டை பகுதியில் காரில் வந்த வியாபாரிகள் கோகுல்ராம், நரேந்திரசிங் ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
காய்கறி வாங்குவதற்காக காரில் வந்த தாளவாடியை சேர்ந்த வியாபாரி சித்துராஜ்(30) என்பவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மகனை பள்ளியில் விட்டுவிட்டு காரில் சென்ற சத்தியமங்கலத்தை சேர்ந்த செந்தில்நாதனிடம்(43) ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சொகுசு பஸ்சில் சோதனை
சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில், பெங்களூருவில் இருந்து வந்த சொகுசு பஸ்சில் பயணம் செய்த சந்தோஷ் (32) உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதே பஸ்சில் இருந்த 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பெங்களூருவில் இருந்து ராமேசுவரம் வந்த தனியார் சொகுசு பஸ்சில் ஒரு பார்சலில் இருந்த ரூ.56 ஆயிரம் மதிப்பு கொண்ட 222 கிலோ துத்தநாகம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆசிரியரிடம் பணம் பறிமுதல்
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் காரில் வந்த டாக்டர் தினேஷ்குமாரிடம் ரூ.1 லட்சத்து 72 ஆயிரமும், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் மினி லாரியில் வந்த கோழி வியாபாரி ராஜேஷிடம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பென்னாகரம் நாகதாசம்பட்டி கூட்ரோடு பகுதியில் ஆசிரியர் அருள்மணி என்பவர் உரிய அனுமதி இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 700-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திசையன்விளையை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் தினேஷிடம்(30) ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தில் காரில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு சென்ற 70 சேலைகளும், மினிவேனில் கொண்டு வந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியில் கார்களில் கொண்டு சென்ற ரூ.4¾ லட்சம் பறி முதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story