நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கே.எஸ்.அழகிரி தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- காங்கிரஸ் கட்சியில் புதுமுகங்கள் வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- வாய்ப்பு உள்ளது.
கேள்வி:- ராகுல்காந்தி கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசியுள்ளதை பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளாரே?
பதில்:- சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் வருவது போன்று, சிறப்பாக ராகுல்காந்தி பேசினார். எனவே அவர் எதிர்மறையாக பேசுகிற தலைவர் இல்லை.
ராகுல்காந்தி மீண்டும்...
கேள்வி:- ராகுல்காந்தி மீண்டும் தமிழகத்துக்கு எப்போது பிரசாரத்துக்கு வருகிறார்?
பதில்:- விரைவில் வருகிறார்.
கேள்வி:- ராகுல்காந்தி மொழிபெயர்ப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதே?
பதில்:- ஒரு மொழியில் சொல்லப்படுவதை தன்னுடைய தாய்மொழியில் சொல்கிறபோது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அறிந்தவரை, அந்த மொழிபெயர்ப்பு ராகுல்காந்தி என்ன சொல்ல நினைத்தாரோ, அது அருமையாக சொல்லப்பட்டது.
பா.ஜ.க-த.மா.கா. தவறான கூட்டணி
கேள்வி:- பா.ஜ.க. இடம் பெற்றுள்ள கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- இதுபோன்ற தவறான அரசியல் புரிதல் இருக்க முடியாது. வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று முதல் விருப்பமனு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க-காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டதும் அந்த தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெறப்படும்.
அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் பொது தொகுதியாக இருந்தால் ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதி மற்றும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story