மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது


மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 10:09 PM GMT)

சென்னையில் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 49). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 படித்துள்ள எனது மகளை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தேன். அரசு மருத்துவக்கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை. அதனால் தனியார் மருத்துவக்கல்லூரியில் எனது மகளை சேர்த்துவிட முயற்சி செய்து வந்தேன்.

இதற்காக எனது நண்பர் செல்வகுமார் என்பவரை அணுகினேன். செல்வகுமார் தனக்கு தெரிந்த மோகன்ராஜ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மூலம் ஏற்பாடு செய்வதாக கூறினார். செல்வகுமார் மூலமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜை நான் நேரில் சந்தித்தேன்.

ரூ.50 லட்சம் மோசடி

மருத்துவக்கல்லூரியில் சீட் பெறுவதற்கு ரூ.50 லட்சம் செலவாகும் என்று மோகன்ராஜ் கூறினார். அதன்படி, ரூ.50 லட்சத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜிடம் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி தனியார் மருத்துவக்கல்லூரியில் மோகன்ராஜ் சீட் வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டேன்.

பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். 2015-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணத்தை மோகன்ராஜ் திருப்பி தரவில்லை. இதற்கிடையில் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த மோசடி தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

கைது

சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் சுந்தரவதனம் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.

அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மீது ஏற்கனவே ஒரு மோசடி வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்து இருந்தனர்.

அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக சுமார் 106 பேரிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்ததாக திருவண்ணாமலையை சேர்ந்த நாவப்பன் (28) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Next Story