பொள்ளாச்சி சம்பவம்: டி.வி. நடிகை நிலானி ஆவேசம்
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து டி.வி. நடிகை நிலானி, தனது கண்டனத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சென்னை,
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல டி.வி. நடிகை நிலானி, தனது கண்டனத்தை பதிவு செய்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் கதறி அழுதவாறே அவர் கூறியிருப்பதாவது:-
பெண்கள் என்ன பாவம் செய்தார்கள். எல்லா வகையிலும் பெண்களை நாசம் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எதுவென்றாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நம் நாட்டில் இதற்கான தண்டனை கிடைக்காது என்று தெரியும். மனிதாபிமானம் எங்கே போனது. சினிமாவில் பார்ப்பது போன்று நேரில் நடக்கிறது.
நாம் எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண் பிள்ளைகளை எப்படி இந்த சமுதாயத்தில் பாதுகாப்பாக விட்டு செல்ல முடியும்? தண்டனை கொடுத்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்கிறார்கள். அவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும். இது தான் நம்முடைய ஆசை. ஆனால் இது எல்லாம் நடக்காது.
என் பையனால் ஒரு பெண் கண்ணீர் சிந்தினாலோ, தவறு நடந்தாலோ அவனை நான் விஷம் வைத்துக் கொல்வேன். குழந்தைகள் கையில் செல்போன் கொடுக்க வேண்டாம். பிள்ளைகளை தவறாக வளர்க்காதீர்கள் என்று நான் ஒவ்வொரு தாயையும் கெஞ்சிக் கேட்கிறேன். பெண் குழந்தைகளை பொத்தி, பொத்தி பாதுகாக்கிறோம். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படி வளர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?
திருநாவுக்கரசு உள்பட 4 பேரின் தாய்மார்களை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பெண்களை மதிக்க தெரிந்தவர்களாக இருந்தால் உங்கள் மகன்களை நீங்களே கொன்றுவிடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிலானியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story