தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் கட்-அவுட், பேனர்களுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மதுரை ஐகோர்ட்டு, வாகனங்களில் ஆட்களை அழைத்து வரக்கூடாது என்றும், கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.
மதுரை,
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் தொடர்ந்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2009-ம் ஆண்டில் மதுரை திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வரை அரசியல் கட்சிகளின் சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
அதேபோல் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் பணம் பட்டுவாடா செய்தது, எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வாகனங்களில் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தது தொடர்பாக 3 ஆயிரத்து 742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.27 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் பணம் கொடுப்பதாலும், வாங்குவதாலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என அதிக அளவில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகள், வானொலி போன்றவற்றின் மூலமும் விளம்பரம் செய்ய வேண்டும்.
செலவை வசூலிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். ஏராளமான கண்காணிப்பு குழுக் களை ஏற்படுத்தி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
சாலைகளிலும், போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது.
தேர்தல் விதிமீறல்களை காரணம் காட்டி, ஒரு தொகுதியில் தேர்தலை ஒத்தி வைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ, அதற்கு காரணமான கட்சியிடம் இருந்து தேர்தல் செலவு தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
கட்-அவுட், பேனர்களுக்கு தடை
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிளக்ஸ் பேனர்கள், ‘கட்-அவுட்’கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு லாரி, வேன், பஸ்கள் போன்ற வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வருவதையும் தடை செய்கிறோம்.
நோட்டீஸ்
இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்மனுதாரராக சேர்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கும், இந்திய தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story