இளையராஜாவுக்கு பாரத ரத்னா; எம்.ஜி.ஆர் பெயரில் தேசிய விருது - பாம.க தேர்தல் அறிக்கை


இளையராஜாவுக்கு பாரத ரத்னா; எம்.ஜி.ஆர் பெயரில் தேசிய விருது - பாம.க தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 15 March 2019 6:30 PM IST (Updated: 18 March 2019 4:03 PM IST)
t-max-icont-min-icon

"இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுத்தர பாமக பாடுபடும் என் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை,

மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் 43 அத்தியாயங்களுடன் 93 பக்கங்கள் அடங்கிய பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். 

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

*  60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக விவசாயிகள் வருங்கால வைப்புநிதி ஆணையம் அமைக்கப்படும்.

* பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத ரத்னா விருது பெற்ற நடிகரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தும்.

* மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுத் தர பாமக பாடுபடும்.

*இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,000 வழங்கும் குறைந்தபட்ச அடிப்படை வருமானத் திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசை பா.ம-.க. வலியுறுத்தும்.

* கொடிய வறுமை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்குப் போதுமான உணவை வழங்கிப் பாதுகாப்பு அளிப்பது அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை ஆகிய திட்டங்களின்படி வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மாநில அரசுகள், உழவர் அமைப்புகளின் ஆலோசனை பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.

*  இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மானியம் போதுமானதல்ல என்பதால், இதை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்த பா.ம.க. வலியுறுத்தும். அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படும்.

* வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* விவசாயிகளுக்கு உரிய இலாபமும், வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியமும் வழங்கப்படுவதை உறுதி செய்ய உழவர் ஊதியக் குழு அமைக்கப்படும்.

* வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். இதற்காக வேளாண் விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

* இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பயிர்க்கடன்களில் ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். மீதமுள்ள தொகையை உழவர்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால் அதன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

* பொதுத்துறை வங்கிகள் மூலம் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது. குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன்பாகவே செலுத்தப்படும் தொகைக்கு 10% வட்டிமானியம் வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மைக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

* நீலகிரி மாவட்டம் ஊட்டி முத்தோரையில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடும் முடிவைக் கைவிட்டு, அம்மையம் அங்கேயே தொடர்ந்து செயல்பட பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* இந்திய நதிகள் இணைப்புக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்படும். இதற்காக நீர்ப்பாசன வல்லுநர்களைக் கொண்டு தனி ஆணையம் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டின் நலனுக்காக கோதாவரி &காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

* காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மாற்றாக, அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய புதிய அமைப்பை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைக்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப்பெற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அங்கீகரிக்கப்படும். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* லோக்பால் அமைப்பு மத்தியில் புதிய அரசு பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.

* மத்திய அரசின் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்படும்.

* 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.

* இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும். தேசிய அளவிலான இடஒதுக்கீட்டின் அளவு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க பா.ம.க. பாடுபடும்.

* அரசுத் துறை மற்றும் பொதுத்துறை பணிகளில் பதவி உயர்விலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்ற பா.ம.க. பாடுபடும்.

* உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அறிமுகம் செய்ய பா.ம.க. வலியுறுத்தும்.

* ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பா.ம.க. பாடுபடும்.

* மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத இடைநிலை பணியிடங்களில் 50% பணியிடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில் சம்பந்தப்பட்ட மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.

* மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைநிலை பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும். அதாவது, கடைநிலைப் பணிகளில் 100% மாநில இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதை கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்றப்படும்.

* தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும். ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 10%, 25% என்ற அளவில் இருக்கும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும். இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.

* புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நோக்குடன் 100% தீமை வரி விதிக்கப்படும்.

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

* வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* உலக அளவிலான அனுபவங்களின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்தும்.

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். 

* வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம் அமைக்கப்படும்.

* இந்தியாவில் மருத்துவக்கல்வி கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் 2 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க முன்வருவோருக்கு குறைந்த விலையில் நிலம், மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

*இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

* அனைத்து நிலை தொழிற்சாலைகளிலும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய -மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

* சென்னை- சேலம் இடையிலான எட்டுவழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் போன்று கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. பாடுபடும்.

* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பா.ம.க. பாடுபடும்.

* ராஜீவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* மீனவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்துச் சிக்கல்களையும் உடனடியாக களைவதற்கு வசதியாக, மத்திய அரசில் மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுக்கும்.

* 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.

* நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை உடனடியாக நிறைவேற்ற பா.ம.க. பாடுபடும்.

* நாடு முழுவதும் காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கும்.

* பொதுத்துறை வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

* ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 18வது வயதில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

* தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள சுயமரியாதை திருமணத்திற்கு அகில இந்திய அளவிலும் சட்டப்படியாக அங்கீகாரத்தைப் பெற்றுத்தர பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

* அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாய்வுப்பாதைகள், பிரெய்லி முறையிலான அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர பா.ம.க. பாடுபடும்.

* முத்தலாக் மூலம் மணமுறிவு வழங்கும் முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும். எனினும், முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது.

* மனிதக் கழிவுகளையும், கழிவுநீர் பாதை மற்றும் தொட்டிகளையும் மனிதர்களே அகற்றும் அநீதிக்கு முடிவு கட்டப்படும். இந்தப் பணிகளில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கத் திட்டம் வகுக்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

Next Story