டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்க தடை சென்னை கோர்ட்டு உத்தரவு


டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்க தடை சென்னை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2019 8:30 PM GMT (Updated: 15 March 2019 5:28 PM GMT)

தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி சின்மயி திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வந்தார்.

சென்னை, 

தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி சின்மயி திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வந்தார். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, கடந்த நவம்பர் 18–ந்தேதி சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து, சின்மயி தரப்பில் சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘2006–ம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி விட்டதாகவும், 2018–ம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி, சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், தன் விளக்கத்தைக் கேட்காமல் சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாடகி சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு மார்ச் 25–ந்தேதிக்குள் பதில் அளிக்க, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கும், அதன் தலைவர் ராதாரவிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Next Story