சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி: தி.மு.க-காங். கூட்டணி பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி: தி.மு.க-காங். கூட்டணி பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
x
தினத்தந்தி 15 March 2019 11:15 PM GMT (Updated: 15 March 2019 7:02 PM GMT)

தி.மு.க. கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

சென்னை, 

தி.மு.க. கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதன்படி சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடுகிறது. ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக 2 கட்டங்களாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இதைத்தொடர்ந்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு), தேவராஜன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகள்

1. வட சென்னை

2. தென் சென்னை

3. மத்திய சென்னை

4. ஸ்ரீபெரும்புதூர்

5. காஞ்சீபுரம் (தனி)

6. அரக்கோணம்

7. வேலூர்

8. தர்மபுரி

9. திருவண்ணாமலை

10. கள்ளக்குறிச்சி

11. சேலம்

12. நீலகிரி (தனி)

13. பொள்ளாச்சி

14. திண்டுக்கல்

15. கடலூர்

16. மயிலாடுதுறை

17. தஞ்சாவூர்

18. தூத்துக்குடி

19. தென்காசி (தனி)

20. நெல்லை

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்

1. திருவள்ளூர் (தனி)

2. கிருஷ்ணகிரி

3. ஆரணி

4. கரூர்

5. திருச்சி

6. சிவகங்கை

7. தேனி

8. விருதுநகர்

9. கன்னியாகுமரி

10. புதுச்சேரி

கம்யூனிஸ்டு கட்சிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உள்ளன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ம.தி.மு.க.

ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்ட பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க.வுக்கு ஈரோடு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட போதிலும், நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் வரும்போது, அந்த நேரத்தில் ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் வழங்கப்படும்.

மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்

கடந்த இரண்டு, மூன்று ஆண்டு காலமாக இங்கே அமைந்திருக்கக்கூடிய இந்த கூட்டணி கட்சிகளை பொறுத்தவரையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகளுடைய தவறுகளை சுட்டிக்காட்டி வலியுறுத்தக்கூடிய வகையில், பல நிலைகளில் ஒருங்கிணைந்து பல போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, மறியல்களை, உண்ணாவிரத போராட்டங்களை தொடர்ந்து நாங்கள் நடத்தி வந்திருக்கின்றோம்.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலிலும் தோழமை இன்னும் சிறப்பான வகையில், அது கூட்டணியாக மாறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரை பெற்று இந்த தேர்தல் களத்தில் நாங்கள் ஈடுபடவிருக்கின்றோம். ஏதோ, பேரத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி இந்த கூட்டணி அல்ல. கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணி இது. ஆகவே, இந்த கூட்டணியின் சார்பில் நாங்கள் களம் காண இருக்கின்றோம். மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story