தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை: தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல்


தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை: தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2019 4:30 AM IST (Updated: 16 March 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் வானூர் தேர்தல் பிரிவு சிறப்பு பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 18 அட்டை பெட்டிகளில் வெள்ளி ஆபரண பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த மகாவீர் மகன் ராகுல் (வயது 23), சென்னையைச் சேர்ந்த முகமது இத்தியாஸ் (25) என்பதும் அவர்கள் சென்னையில் வெள்ளி நகைக்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் இவர்கள் வெள்ளி கொலுசுகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி ஆபரணங்கள், விளக்குகளை புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் கொடுத்துவிட்டு மீதம் உள்ளவற்றுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் சென்ற காருக்கு உரிய ஆவணம் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும். பின்னர் அவற்றை வானூர் தாசில்தார் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் உத்தரவின்பேரில் அந்த வெள்ளி ஆபரண பொருட்கள் வானூர் சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

கண்காணிப்புக்குழுவினர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பவித்திரம் ஏரிக்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் இருந்து வந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி 3.4 கிலோ எடையில் வெள்ளி பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரை ஓட்டிவந்த பூபதியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பூபதி, உப்பிலியபுரத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருவதும், வியாபாரம் தொடர்பாக நாமக்கல்லுக்கு வெள்ளி பொருட்களுடன் சென்றதும் தெரியவந்தது. பின்னர் அதற்கு உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு, வெள்ளி பொருட்களை திரும்ப பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சூரக்காடு முக்கூட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 1 கிலோ 248 கிராம் நகைகள் இருந்தன. அந்த நகைகளை புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு புதுச்சேரியை சேர்ந்த சபரேஷி என்பவர் எடுத்து சென்றது தெரிய வந்தது. அதில் 1 கிலோ 57 கிராம் நகைகளுக்கு மட்டும் உரிய ஆவணங்கள் இருந்தன. மீதி உள்ள நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

இதனால் பறக்கும் படையினர் 1 கிலோ 248 கிராம் நகைகளையும் பறிமுதல் செய்து சீர்காழி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.31 லட்சம் என கூறப்படுகிறது. இதனையடுத்து நகைகளை எடுத்து வந்த சபரேஷிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story