மாநில செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி + "||" + The list of Congress candidates will be published in 3 days

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி
‘காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும்’ என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 நாடாளுமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு கூட்டம் நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தேர்தல் பிரசாரக்குழு தலைவரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தார். இதில் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பிரசாரக்குழு துணைத்தலைவர் ஜே.எம்.ஆரூண், ஒருங்கிணைப்பாளர் குஷ்பூ ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரசாரக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பேச்சாளர்களுக்கு, எவ்வாறு தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்? மேடை பேச்சு எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு இடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி சென்னை வந்ததை பற்றி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில் எந்த பொருளும் இல்லை.

இலங்கை பிரச்சினையில் என்ன செய்தீர்கள்? என்று அவர் கேட்டு இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்?. இந்தியாவை ஒற்றுமையாகவும், வளர்ச்சி பாதையிலும் கொண்டு செல்லும் பணியில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக ஈடுபடுகிறது.

எங்கள் கட்சியை போன்று தியாகவரலாறு வேறு எந்த கட்சிகளுக்கும் கிடையாது. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு இல்லை. சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்டவர்கள் என்று பா.ஜ.க.வில் யாரையாவது இப்போது சொல்ல முடியுமா?. தியாக பரம்பரையை பார்த்து தமிழிசை கேள்வி கேட்பதா?

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும்.

பொள்ளாச்சி விஷயத்தில் சபரீசன் மீது வழக்கு என்பது சர்வாதிகார தன்மையை காட்டுகிறது. இந்த வழக்கு மிரட்டுவதற்கு சமம். மிரட்டுவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. ரூ.1,000 செலுத்தி விருப்ப மனு வாங்கி செல்வதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் முண்டியடித்தனர்.

அதில் முதல் விருப்ப மனுவை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் கார்த்தி ப.சிதம்பரம் சார்பில் ராகுல் காந்தி பெயரில் வாங்கினர்.

அதேபோல், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனுவை வாங்கி சென்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவுடன் பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதி மற்றும் பெண் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்றும் (சனிக்கிழமை) விருப்ப மனு வினியோகம் நடைபெற இருக்கிறது.