பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி,
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ‘அரோகரா’ கோஷம் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரம்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ‘பிரம்மோற்சவம்’ எனப்படும் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திர தேவர் உலா போன்றவை நடைபெற்றது. நேற்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடந்தது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகையான அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் கொடிமண்டபம் முன்பு எழுந்தருளினார்.
கொடியேற்றம்
அதையடுத்து அஸ்திர தேவர், விநாயகர் முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
பின்னர் ஓதுவார்கள் திருமுறை, பண்பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாணம், தேரோட்டம்
திருவிழாவின் 6-ம் நாளான 20-ந் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. 7-ம் நாளான 21-ந் தேதி(வியாழக்கிழமை) பங்குனி உத்திரத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, பின்னர் காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 8.55 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்த பல்லக்கில் எழுந்தருளல், காலை 11 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் தேரேற்றமும், மாலை 4.20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது.
பின்னர் இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story