ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் அழிப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 15 March 2019 9:45 PM GMT (Updated: 2019-03-16T01:47:51+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாக பகுதியில் பெயிண்டால் வரையப்பட்டு இருந்த பூக்கள் போன்ற ஓவியங்களை, தாமரைச் சின்னத்தை போன்று இருப்பதாக கூறி தேர்தல் அதிகாரிகள் அழித்தது புதிய சர்ச்சையாகி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

தமிழகத்தின் முத்திரை சின்னமாகவும், வைணவ தலங்களில் மிகவும் முக்கியமானதாகவும் விளங்கக் கூடியது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். இந்த கோவிலில் புராணங்களை விளக்கக் கூடிய ஓவியங்கள் மற்றும் ஆண்டாள் மலர்களில் குடி கொண்டுள்ளதாக கூறப்படும் பல்வேறு வகையிலான பூக்கள் நுழைவுவாயில் உள்பட கோவிலின் பல்வேறு பகுதிகளில் பெயிண்டால் வரையப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அதிகாரிகள் கோவில் பகுதிக்கு வந்தபோது கோவிலின் நுழைவு வாயில் பகுதி மற்றும் கோவிலின் சில பகுதிகளில் வரையப்பட்டு இருந்த பூக்கள் போன்ற ஓவியங்களை பார்த்தனர். அந்த ஓவியங்கள் பா.ஜனதா கட்சி சின்னமான தாமரை வடிவில் இருப்பதாக கூறி அதை சுண்ணாம்பு கலவையைக் கொண்டு, அந்த ஓவியங்களை அழித்தனர்.

தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை புதிய சர்ச்சையாகி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பக்தர்களும், இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்து அமைப்புகள் சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும், போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் நுழைவு வாயில் உள்ளிட்ட பல பகுதிகளில் தாமரைப்பூ ஓவியங்களை கட்சி சின்னம் என கூறி தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் சுண்ணாம்பு கலவை கொண்டு அழித்தது கண்டனத்துக்குரியது. தாமரை என்பது தாயாரின் அவதாரப் பூ. கோவிலுக்குள் வந்து ஓவியங்களை அழிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story