பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க துப்பாக்கி உரிமம் கேட்டு அக்காள்-தங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு


பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க துப்பாக்கி உரிமம் கேட்டு அக்காள்-தங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 16 March 2019 9:45 PM GMT (Updated: 16 March 2019 7:40 PM GMT)

பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க துப்பாக்கி உரிமம் கேட்டு அக்காள்-தங்கை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

கோவை,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள்கள் தமிழ்ஈழம் (வயது 20). பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஓவியா (14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அக்காள், தங்கையான இவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. நாள்தோறும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்கவும், எங்களின் தற்காப்புக்காகவும், துப்பாக்கி வைத்து கொள்வதற்கான உரிமம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வீடியோ

மனு கொடுத்த பிறகு தமிழ் ஈழம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகின்றேன். எனது தங்கை 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் 4 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 4 வீடியோக்கள் மட்டுமே உள்ளன என்றும் கூறுகின்றனர்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி, வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ள அனைத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story