9 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் 249 பேர் விருப்பமனு தாக்கல் ராகுல்காந்தி பெயரிலும் மனு வழங்கினர்


9 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் 249 பேர் விருப்பமனு தாக்கல் ராகுல்காந்தி பெயரிலும் மனு வழங்கினர்
x
தினத்தந்தி 17 March 2019 4:30 AM IST (Updated: 17 March 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட அக்கட்சியினர் 249 பேர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கன்னியாகுமரி, திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், சிவகங்கை, திருச்சி, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்று, மனுதாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனுவை பெற்று, மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

ராகுல்காந்தி பெயரில்...

நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி, சிவகங்கை, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவருடைய பெயரில் கார்த்தி ப.சிதம்பரம், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், வடசென்னை முன்னாள் மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ மற்றும் முன்னாள் கவுன்சிலர் எம்.கண்ணன் ஆகியோர் உள்பட பலர், மாநில துணைத்தலைவர் தாமோதரன், பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, ராஜேந்திரன் ஆகியோரிடம் மனுதாக்கல் செய்தனர்.

திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார்

இதேபோல் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அவருடைய மகன் ராமச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் மனுதாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நிர்வாகிகளும், கன்னியாகுமரி தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் எச்.வசந்தகுமார், விஜயதாரணி, தொழில் அதிபர் பொன் ராபர்ட்சிங் ஆகியோரும், ஆரணி, கரூர் தொகுதிகளுக்கு மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சராவும் மனுதாக்கல் செய்து இருக்கின்றனர்.

249 பேர் விருப்பம்

திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 249 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேரும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி தொகுதிக்கு 54 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர், ஒரு பட்டியலை தயார் செய்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு (டெல்லி) அனுப்ப இருக்கின்றனர். அங்கு இருக்கும் தேர்தல் குழுவினர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.

3 நாளில் வேட்பாளர் பட்டியல்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 3 நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story