நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் கே.எஸ்.அழகிரி கோரிக்கை


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
x
தினத்தந்தி 17 March 2019 4:15 AM IST (Updated: 17 March 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னோடி மாநிலம்

தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து வருகிற தேர்தலுக்காக தற்காலிகமாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுகிற அமோக ஆதரவு பெற்றிருக்கிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது.

தமிழகத்தில் ராகுல் போட்டி?

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மதம், சாதி, எல்லைகளைக் கடந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய மகத்தான தலைவராக விளங்குகிற ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் சொந்தமுள்ளவராக கருத முடியாது. அவர் இந்திய மக்களின் சொத்தாக கருதப்படுகிறவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, நல்லிணக்க கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அவர் வடக்கே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற அதேநேரத்தில் இந்தியாவின் தென் பகுதியாக விளங்குகிற தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று லட்சோபலட்சம் மக்களின் சார்பாகவும், மதச்சார்பற்ற சக்திகளின் சார்பாகவும் அவரை அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறேன். இத்தகைய போட்டியின் மூலம் வடக்கையும், தெற்கையும் இணைத்து நிற்கிற எழுச்சித் தலைவராக ராகுல்காந்தியை கருதி இந்திய மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story