வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, சத்யபிரத சாகு கடிதம்


வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, சத்யபிரத சாகு கடிதம்
x
தினத்தந்தி 16 March 2019 11:15 PM GMT (Updated: 2019-03-17T02:23:55+05:30)

வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் அனுப்பி உள்ளார். அதனுடன் இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவையும் அவர் இணைத்து உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர் ரூ.25 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.12 ஆயிரத்து 500 தொகையையும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகன கட்டுப்பாடு

வேட்புமனு தாக்கல் செய்ய ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்கு வேட்பாளர் செல்ல வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

வேட்புமனுவை தாக்கல் செய்யும் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும், அதாவது மொத்தம் 5 பேர்தான் அங்கு செல்ல வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம் அல்லது அலுவலக வளாகத்தில் அனுமதிக்கப்படும் வாகனங்கள், நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு அல்லது போலீஸ் கமிஷனரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரலாம்.

வீடியோ படம்

வேட்புமனு தாக்கலின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ படமாக எடுக்கப்படும். குறிப்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலக வளாகங்களுக்குள் வரும் வாகனங்கள், வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

அதிகளவிலான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்கான தடுப்புகள் அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எடுக்கலாம். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story