பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் குவிகிறது பாதிக்கப்பட்ட 2 பெண்கள், வீடியோ பரவலை தடுக்குமாறு கதறல்


பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் குவிகிறது பாதிக்கப்பட்ட 2 பெண்கள், வீடியோ பரவலை தடுக்குமாறு கதறல்
x
தினத்தந்தி 16 March 2019 10:15 PM GMT (Updated: 16 March 2019 8:58 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் குவிகிறது.

கோவை, 

பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பாலியல் வன்முறை விவகாரம், 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த புகாரினால் அம்பலமானது. இதன்பேரில் போலீசார் திருநாவுக்கரசு(வயது27), இவருடைய கூட்டாளிகளான சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசு கும்பலினால் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி.யில் புகார்

பாதிக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக புகார் கொடுக்க வரலாம் என்றும், அவர்களது பெயர், விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் வெளியிடப்படாது, பாதிக்கப்பட்டவரின் புகாரை தொடர்ந்து உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு செய்து இருந்தனர்.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ள 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், cb-c-i-d-c-b-e-c-ity@gm-a-il.com இ-மெ யில் மூலம் புகார் மனுக்களை அனுப்பலாம் என்றும் அறிவித்தனர்.

160 பேர் புகார்

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாளில் 160 பேர் போன் மூலம் புகார் செய்துள்ளனர். இவர்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து, அவற்றை பத்திரப்படுத்தி விசாரணை தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த வழக்கில் பலர் சாட்சிகளாகவும் சேர்க்கப்பட இருக்கிறார்கள். இ-மெயில் மூலம் சிலர் மட்டும் அனுப்பியுள்ள தகவலில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 பெண்கள் கதறல்

பொள்ளாச்சி சம்பவத்தில் 2 குடும்ப பெண்களின் வீடியோ வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போன் செய்து தங்களது வீடியோ பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் கூறி கதறி அழுதுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அந்த 2 பெண்களையும் போனில் ஆறுதல் படுத்தி பேசியுள்ளனர்.

மேலும் ஆபாச படக்கும்பலின் செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களில் அந்த பெண்களின் நம்பர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த 2 பெண்களையும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்து புகார் செய்யுமாறும், பெயர் மற்றும் விவரங்கள் வெளியில் தெரியாமல் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருவது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story