மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் என தகவல் வெளியாகியது. இப்போது குமரவேல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. வேட்பாளர்கள் நேர்காணல் முடியும் முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து விலகிய குமரவேல், செய்தியாளர்களிடம் கூறுகையில், கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன் என்றார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே கட்சிகள் நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Related Tags :
Next Story