தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 March 2019 5:45 AM IST (Updated: 19 March 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

வேட்பு மனு தாக்கல்

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி (இன்று) தொடங்குகிறது. அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

26-ந் தேதி கடைசி நாள்

வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன. இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். (முன்பு ஒரு ஆண்டு வருமான வரிக்கணக்கு). இந்து கூட்டுக்குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும்.

வழக்கு விவரங்கள்

வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள், டி.வி. சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் இங்கு வர இருக்கிறார். ஆனால் அவர் வருவதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பணம் பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக 18-ந் தேதியன்று கணக்கில் காட்டப்படாத ரூ.60 லட்சத்து ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் ரூ.6.77 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. தகுந்த ஆதாரங்கள் காட்டப்படாததால் இதுவரை இந்த தொகை திருப்பித்தரப்படவில்லை.

அதுபோல எவர்சில்வர் டம்ளர், மது பாட்டில்கள் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. பறிமுதல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

தேர்தல் தொடர்பாக நடத்தப்படும் சோதனைகளில் வாகனங்களை கைப்பற்றுவதில்லை. ஆனால் வாகனத்தை பற்றிய விவரங்களை பெறுவதற்காக அவை சிறிதுநேரம் நிறுத்தி வைத்திருக்கப்படும்.

கைத்துப்பாக்கிகள்

தமிழகம் முழுவதும் உரிமம் உள்ள 7 ஆயிரத்து 20 கைத்துப்பாக்கிகள் பெறப்பட்டு உள்ளன. உரிமம் இல்லாத 61 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. 25 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,111 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பொதுச் சுவர்களில் வரையப்பட்டு இருந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 201 விளம்பரங்கள், போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதுபோல் தனியார் சுவர்களில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 159 விளம்பரங்கள் நீக்கப்பட்டன.

புதிய அட்டைகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி வந்த 8 லட்சத்து 24 ஆயிரம் விண்ணப்பங்களில் 6.95 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களும் விரைவில் பரிசீலிக்கப்படும்.

புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி இன்னும் முடியவடையவில்லை. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, புதிய அட்டை கிடைக்காவிட்டாலும், தேர்தல் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப் போடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

பின்னர் சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் கமிஷனின் அறிவுரைகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை அமல்படுத்துவது பற்றியும், தேர்தல் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினேன். இந்த கூட்டத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

செலவின பார்வையாளர்கள்

தேர்தல் செலவின பார்வையாளர்கள் 19-ந் தேதி (இன்று) தமிழகத்துக்கு வருகிறார்கள். 26-ந் தேதி பொதுப் பார்வையாளர்கள் வருகிறார்கள்.

தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, கூடுதல் பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படும். ஆரம்பத்தில், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு செலவின பார்வையாளர் என்ற வீதத்தில் வர உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் செலவின பார்வையாளர்கள் வரவழைக்கப்படுவார்கள்.

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு பொதுப்பார்வையாளர் நியமிக்கப்படுவார். பொதுப்பார்வையாளர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றி கணித்து தகவல் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

67 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்கள் தவிர ஊர்க்காவல் படை போன்ற போலீஸ் அல்லாதவர்கள் 34 ஆயிரம் பேரும் பயன்படுத்தப்படுவார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைதானவர்களுக்கு வாக்குரிமை உண்டு. தண்டனை கைதிகள் வாக்களிப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. வாரண்டில் ஆஜராகாத 6,220 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டாஸ்மாக் கடைகள்

பள்ளி குழந்தைகளை கட்சி பிரசாரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும். தனியார் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு வாக்குப்பதிவன்று ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய தொழிலாளர் நலத்துறைக்கு தேவையான அறிவுரை வழங்கியுள்ளோம்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Next Story