அ.தி.மு.க.வில் மதுரை மாவட்ட அமைப்பு 3 ஆக பிரிப்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அ.தி.மு.க.வில் மதுரை மாவட்ட அமைப்பு 3 ஆக பிரிப்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-19T01:17:50+05:30)

அ.தி.மு.க.வில் மதுரை மாவட்ட அமைப்பு 3 ஆக பிரிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. நிர்வாக வசதிக்காக மதுரை மாவட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர்.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில் அந்த அறிவிப்பு நேற்று திடீரென்று ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பதவி

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகர், புறநகர் என்று செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அமைப்புகள் கட்சியின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ‘மதுரை மாநகர்’, ‘மதுரை புறநகர் கிழக்கு’, ‘மதுரை புறநகர் மேற்கு’ என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

மதுரை மாநகர் மாவட்டத்தில், மதுரை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு ஆகிய 4 தொகுதிகளும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில், மதுரை கிழக்கு, மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில், சோழவந்தான்(தனி), திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளும் உள்ளடங்கி உள்ளன.

அதனடிப்படையில் மதுரை மாநகர மாவட்ட செயலாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

அ.தி.மு.க. அமைப்புரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சி பணிகளை ஆற்றிட வேண்டும்.

மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போது உள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story